ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல சாகச போட்டோகிராஃபர் ரெமி லூசிடி (Remi Lucidi).
கிரேன்கள், பாலங்கள், உயர்ந்த மலைப்பகுதிகள், கட்டடங்கள் என ஆபத்தான இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவதை வழக்கமாகக் கொண்டவர். சமீபத்தில் ரெமி லூசிடி, ஹாங்காங்கிலுள்ள 68 மாடிகள் கொண்ட உயரமான நட்சத்திர ஹோட்டலுக்கு நண்பரைக் காணச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால், அங்கு யாருக்கும் தெரியாமல் 68வது மாடிக்குச் சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த செக்யூரிட்டி அவரைத் தடுக்க முயன்றுள்ளார். இருப்பினும், ரெமி லூசிடி, கண்ணாடி ஜன்னல்களை உடைத்து அக்கட்டடத்தின் உச்சிக்குச் சென்றுள்ளார். பின்னர், செக்யூரிட்டி உடனே காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் ரெமி லூசிடி 68வது மாடியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் பற்றிக் கூறும் அப்பகுதியின் காவல் துறையினர், “ரெமி லூசிடி, வியாழன் ஜூலை 27ம் தேதி மாலை 6 மணியளவில் ‘ட்ரெகுண்டர் டவர் (Tregunter Tower)’ செக்யூரிட்டியிடம் 40வது மாடியில் உள்ள ஒரு நண்பரைச் சந்திக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், செக்கியூரிட்டி அதை உறுதி செய்வதற்குள் அருகேயிருந்த லிஃப்டில் ஏறி 49 தளத்திற்கச் சென்றுள்ளார். பின், அங்கிருந்து படியில் ஏறி 68வது மாடிக்குச் சென்றுள்ளார். தகவல் அறிந்து நாங்கள் வருவதற்குள் அவர் அங்கிருந்து தவறிவிழுந்து உயிரிழந்துவிட்டார்” என்று கூறுகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலமாக வேண்டும் என்பதற்காக இதுபோல் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.