டிரினிடாட்,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடர் முடிந்ததும், 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி தரோபாவில் நாளை நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் ஷாய் ஹோப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மீண்டும் 20 ஓவர் அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். இதே போல் ஒரு நாள் தொடரில் ஆடாத நிகோலஸ் பூரன் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.
‘அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை மனதில் கொண்டு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக அணிக்கு சரியான வீரர்கள் சேர்க்கையை கண்டறிய நாங்கள் பல்வேறு திட்டங்களை பார்க்கிறோம்’ என்று வெஸ்ட்இண்டீஸ் அணியின் தேர்வு குழு தலைவர் தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் தெரிவித்தார்.
வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவர் போட்டி அணி வருமாறு:-
ரோமன் பவெல் (கேப்டன்), கைல் மேயர்ஸ் (துணை கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹூசைன், அல்ஜாரி ஜோசப், பிரன்டன் கிங், ஒபெட் மெக்காய், நிகோலஸ் பூரன், ரொமாரியா ஷெப்பர்டு, ஒடியன் சுமித், ஒஷானே தாமஸ்.