இவ் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சுற்றுலாத்துறையினூடாக 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

2023 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் வருகை: 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

2022 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 205% அதிகரிப்பு.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக World Travel Awards இறுதிப் போட்டியை இலங்கையில் நடத்துவது குறித்து அவதானம்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க இரவு நேரப் பொருளாதார முறைமை (Night Economy)- சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே.
இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இதன் மூலம் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளதுடன் அந்நியச் செலாவணியை அதிகரிக்க உதவியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே,
கடந்த வருடம் இந்நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக உள்நாட்டு வர்த்தகங்கள் மாத்திரமன்றி சுற்றுலாத்துறையும் வீழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களால் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இவ்வருடம் இதுவரை சுமார் 763000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், அது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 205% சதவீத வளர்ச்சியாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். எமது நாட்டுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும் பிரதான வழிமுறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை காணப்படுவதால் அதனை மேலும் மேம்படுத்தவதே எமது நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற “மிஸ் வேல்ட் டுவரிஸம்” நிகழ்ச்சி, தனியார் துறையினரால் நடத்தப்பட்டாலும் இராஜாங்க அமைச்சு என்ற வகையில் நாம் அதற்கு ஆதரவு வழங்கினோம். அதில் 30 நாடுகள் கலந்துகொண்டதுடன், அதில் பங்கேற்க வருகை தந்திருந்தவர்கள் இலங்கையை சுற்றிப்பார்த்ததுடன் அதன் மூலம் அவர்களின் சமூக வலைத்தளங்கள் ஊடாக இலங்கையின் சுற்றுலாத்தலங்கள் தொடர்பில் அவர்கள் பகிர்ந்துகொள்கின்ற விடயங்கள் காரணமாக அந்த நாடுகளில் எமது நாடு பிரபல்யப்படுத்தப்படுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வருட இறுதியில் World Travel Awards இறுதிப் போட்டியை இலங்கையில் நடத்த திட்டமிட்டு வருவதாகவும், இந்த நிகழ்ச்சியை டிசம்பர் மாதத்தில் இலங்கையில் நடத்த எதிர்பார்த்துள்ளதோடு, இலங்கைக்கு வருகை தரவுள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இடம்பெறவிருக்கும் கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இரவு நேர பொருளாதார முறையை (Night Economy ) பின்பற்ற வேண்டும். ஒருவரின் வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்க தேவையான வசதிகளை வழங்கும் இடமே சுற்றுலாத் தலமாகும். எனவே இரவு 10 மணிக்கு சுற்றுலா தலத்தை மூடினால் சுற்றுலாப் பயணிகள் வருகை தரமாட்டார்கள். இறந்த நகரங்களுக்கு (Death City) சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. எனவே, நமது கடற்கரைகளை இரசிக்க வேண்டுமெனில் சுற்றுலாப் பயணிகள், இரவு முழுவதும் கடற்கரையில் தங்க வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் எமது நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இந்நாட்டில் உள்ள ஒரு சிலரால் ஏற்படும் மோசமான விடயங்கள் முழு சுற்றுலாத்துறையையும் பாதிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், அது மட்டுமன்றி பாதிக்கப்பட்டவர்கள் தமது நாட்டுக்கு திரும்பிச் சென்று இது தொடர்பில் வெளியிடும் கருத்துக்களால் எமது சுற்றுலாக் கைத்தொழில் பாரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு இந்நாட்டில் பாதுகாப்பு வழங்கவேண்டியது நமது பொறுப்பு ஆகும். இப்படியான விடயங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்த அமைச்சர், ஒரு சிலர் செய்யும் தவறுகளால் இந்நாட்டின் முழுமையான சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறைக்கு ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு, அனுமதி வழங்கல் போன்ற சுமார் 10 சதவீத பங்களிப்பையே அமைச்சு என்ற வகையில் முன்னெடுப்பதாகவும் சுற்றுலாத்துறைக்கு தனியார் துறையினரின் பங்களிப்பே அதிகம் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், சுற்றுலாப் பயணிகள் செல்லக் கூடிய இடங்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் ஹோட்டல்கள் போன்றவை பெரும்பாலும் தனியாருக்கு சொந்தமானதாகவே இருக்கின்றது என்றும் எனவே அமைச்சு என்ற வகையில் நடைமுறைப்படுத்த வேண்டிய பாதுகாப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களை முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்குப் பின்னரும் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பதட்ட நிலை காரணமாகவும் இந்நாட்டில் சுற்றுலாத்துறையில் ஈடுபடுகின்றவர்கள் பொருளாதார ரீதியில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாத்துறை அமைச்சு என்ற வகையில் நாம் அவர்களை பலப்படுத்த வேண்டிய அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும், அவர் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு எமது ஆதரவை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.