மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக மாநில மாநாட்டுப் பணிகள் தீவிரமாகியிள்ள நிலையில், ஓ.பன்னீர்ச்செல்வமும், டி.டி.வி தினகரனும் இணைந்து கொடநாடு கொலை-கொள்ளை சம்பவத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். இது குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஓ.பன்னீர்செலவத்துக்கு எதிராக கடுமையாக பேசி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களை இந்த கொடுங்கோல் அரசு வாட்டி வதைக்கின்றது. மின்சார கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்களின் விலை, விண்ணைத் தொடும் வகையில் உயர்ந்துள்ளது. காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது.இவற்றுக்கு எதிராக தினந்தோறும் அறிக்கை வாயிலாக அரசிடம் எடப்பாடியார் உரிமைக் குரலை எழுப்பி வருகிறார்.
ஆனால், திமுக-வை சிலர் துதி பாடுவதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அவர்கள் திமுகவில் இருப்பவர்களோ, கூட்டணியில் இருப்பவர்களோ அல்ல. அம்மாவின் திருநாமத்தையும் அதிமுகவின் பெயரைச் சொல்லி வளர்ந்தவர்கள், அம்மாவே அடையாளம் என்று வாழ்ந்தவர்கள், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அம்மாவின் மரணம் குறித்து பொய் வழக்குகளை தொடுத்த திமுக-வுக்கு துதி பாடும் நிலையில் உள்ளனர்.
இதை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் எள்ளி நகையாடுகிறார்கள். இவர்கள் மக்களால், தொண்டர்களால் கைவிடப்பட்டவர்கள், கழக நிர்வாகிகளின் நம்பிக்கையை இழந்தவர்கள்,
அம்மாவே தெய்வம், கழகமே கோயில் என்று வாழ்ந்து வருகிற தொண்டர்களுக்கு மத்தியில் இப்படியும் சில குண்டர்கள் இருந்து வந்தது நமக்கு வேதனை அளிக்கிறது. அரசியலிலே தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எதிரிகளிடம் உண்மை தொண்டர்களை அடமானம் வைத்து, தங்கள் வாழ்வை உயர்த்தி கொள்வதற்காக எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து, இப்போது கடைசி முயற்சியாக நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று வந்துள்ளார்கள்.
உங்களுக்கு வெட்கம், மானம், ரோசம், சூடு, சொரணை ஏதாவது இருக்கிறதா என்று இந்த உதயகுமார் கேட்பதாக நினைத்து விடாதீர்கள், இரண்டு கோடி அதிமுக தொண்டர்களும், தமிழ் மக்களும் உங்களிடம் கேட்கிறார்கள்.
எதற்காக இந்த போராட்டத்தை நீங்கள் நடத்துகிறீர்கள்? உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? இந்த சம்பவத்தில் வழக்குகளை பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதிமன்றத்திலே சமர்ப்பித்தது எல்லாம் உங்களுக்கு தெரியாதா?
அப்போதெல்லாம் நீங்கள் அமெரிக்காவில், ஜப்பானில் இருந்தீர்களா? இன்று போராட்டத்திற்கு தலைமை தாங்குகிற நீங்கள்தானே அன்று இத்தனை நடவடிக்கைகளுக்கும் முக்கிய பொறுப்பாளராக இருந்து வழிநடத்தியதை மறைத்துவிட முடியாது. உங்களுக்கு தெம்பு, திராணி இருந்தால் எடப்பாடியார் இன்றைக்கு எப்படி திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி கொண்டிருக்கின்றாரோ அதேபோல் உங்களால் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடியுமா?
இன்று நீங்கள் போராட்டத்துக்கு அறிவிப்பு கொடுத்த உடனே மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பது உங்கள் கவனத்திற்கு வந்ததா? தொண்டர்களை நீங்கள் பங்கேற்க செய்வதற்கு எடுக்கிற முயற்சிகள் எல்லாம் தோல்வியில்தான் முடியும். இந்த வழக்கிலே குற்றவாளிக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்த திமுக வழக்கறிஞரே இன்றைக்கு அரசு வழக்கறிஞராக இருக்கிறார் என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?
வருங்கால தமிழக முதலமைச்சர் எடப்பாடியாரை நீங்கள் அவதூறு செய்யலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகப் போகும். திமுகவின் ஊதுகுழல் போல், பினாமி போல் நீங்கள் ஆர்பாட்டம் செய்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இரண்டு கோடி தொண்டர்கள் நேசிக்கும் எடப்பாடியாரை பழி சுமத்தினால் அது உங்களுக்கே திரும்பி விடும்” என்று தெரிவித்துள்ளார்.