`பாஜக ஆட்சியில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இவை…'- தரவுகளுடன் பட்டியலிட்ட அசோக் கெலாட்

மணிப்பூரில் அரங்கேற்றப்படும் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கிய நிலையில், இப்போதுவரை மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுப்பும் போதெல்லாம் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வினர், `ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பேசப்பட வேண்டும்’ எனக் கூறிவருகின்றன.

அசோக் கெலாட்

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் முதல்வர் அசோக் கெலாட், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன எனக் குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார்.

அதில், “பா.ஜ.க-வுக்கு கசப்பான உண்மையாக இருந்தாலும் என்.சி.ஆர்.பி தரவுகளின்படி…

1, பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகபட்சமாக பா.ஜ.க ஆளும் மத்தியப்பிரதேசத்தில் தான் பதிவாகியிருக்கிறது.

2, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கடத்தல் ஆகியவற்றில் உத்தரப்பிரதேசம் முன்னனியில் இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றன்க்கள்

3, சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் வழக்கு, அதாவது போக்சோ வழக்குகளில், நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் மாநிலம், மத்தியப் பிரதேசம்தான். ராஜஸ்தான் 12-வது இடத்தில் இருக்கிறது.

4, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் 2019-ம் ஆண்டை ஒப்பிடும்போது, 2021-ல் ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருக்கின்றன, அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன.

5. பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களை உலகமே பார்த்திருக்கிறது.

6. ஜோத்பூரில் காதலன் கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏ.பி.வி.பி தொண்டர்கள் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றம்

7. ராஜஸ்தானில் எஃப்.ஐ.ஆர் கட்டாயப் பதிவு என்ற கொள்கை இருந்தபோதிலும், 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021-ல் சுமார் 5% குறைவான குற்றங்களே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத், உத்தரகாண்டில் அதிக குற்றங்கள் பதிவுசெய்யப்படுகிறது.

8, அஸ்ஸாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடப்பதாக கூறப்படுகிறது. அதில் பா.ஜ.க- ஆட்சி செய்யும் மாநிலங்களே முதல் 5 இடத்தில் இருக்கின்றன.

ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால், இது தொடர்பாக முழு விசாரணை நடக்கிறது. குற்றங்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், மணிப்பூர் உள்ளிட்ட பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில், மத்திய, மாநில அரசுகளின் தோல்விகளிலிருந்து கவனத்தை திசை திருப்ப, மத்திய மற்றும் மாநில பா.ஜ.க தலைவர்கள் ராஜஸ்தானுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

எனவே, இதை ராஜஸ்தான் அரசு சகித்துக் கொள்ளாது, பா.ஜ.க ராஜஸ்தானியர்களை இழிவுபடுத்துவதற்கும், அவமானப்படுத்துவதற்கும் நேரம் வரும்போது ராஜஸ்தான் மாநில மக்கள் தக்க பதிலளிப்பார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உச்சநீதி மன்றம்

மணிப்பூர் பெண்கள் வீடியோ விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம் வாதத்தின் போது, “மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேசுகிறீர்கள். அது சரிதான்… அதே நேரம், மணிப்பூரில் நடந்த கொடுமைகளை மன்னிக்க முடியாது. இதைப் பேசினால், அதையும் பேசுங்கள் எனக் கூறுவதன் நோக்கம் இந்தியாவின் அனைத்து பெண்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிறீர்களா… அல்லது எதையும் கண்டுக்கொள்ளாமல், யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.