Doctor Vikatan: என் 7 வயதுக் குழந்தையை மணலில் விளையாட அனுமதிப்பதில்லை. வெளி உணவுகளைக் கொடுப்பதில்லை. சுத்தமான குடிநீர், உணவு என பார்த்துப் பார்த்துதான் வளர்க்கிறேன். ஆனாலும் அடிக்கடி அவனுக்கு உடல்நலம் பாதிக்கிறது. ரொம்பவும் பாதுகாப்பாக வளர்ப்பதால்தான் இப்படி வருகிறது என்கிறார்கள் சிலர். குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது நோய் எதிர்ப்புத்திறனை பாதிக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.
அதீத சுத்தம் பார்ப்பது, சுத்தத்தில் அலட்சியமாக இருப்பது என இரண்டுமே தவறுதான். வெளியிடங்களில் தண்ணீர் உட்பட எதையும் எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல் குழந்தைகளை பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோர்கள் பலர். இன்னொரு பிரிவினரோ எல்லாவற்றையும் சாப்பிட அனுமதிப்பார்கள். குழந்தைகளை குளிக்கக்கூட வைக்க மாட்டார்கள், எங்கே வேண்டுமானாலும் எதையும் சாப்பிட அனுமதிப்பார்கள். இந்த இரண்டுமே தவறு.
அளவுக்கதிக ஜாக்கிரதை உணர்வுடன் வளரும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை தொடர்பான பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம். அடிப்படை சுத்தம்கூட பேணாத குழந்தைகளுக்கு தொற்றுநோய்கள் அதிகம் வரும். இரண்டுக்கும் இடைப்பட்ட வளர்ப்புமுறையே சரியானது.
குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள். விளையாடி முடித்ததும் கை,கால்களைக் கழுவச் சொல்லி, பிறகு சாப்பாடு கொடுங்கள்.
சுத்தமான நீர் கொடுங்கள். அதற்காக உங்கள் வீட்டிலிருந்து கொடுத்தனுப்பும் தண்ணீர்தான் சுத்தமானது என நினைக்காதீர்கள். வெளி உணவானாலும் அது சுத்தமாகத் தயாரிக்கப்பட்டதா என்பதுதான் முக்கியம். தினமும் பல் துலக்குவது, குளிப்பது, கழிவறை சுகாதாரம் போன்றவற்றைப் பழக்குங்கள். பெரியவர்களை பாதிக்கும் அனைத்து தொற்றுகளும் குழந்தைகளையும் பாதிக்கலாம். வைரஸ் தொற்று குழந்தைகள் மத்தியில் பரவலானது.
குழந்தைக்குக் காய்ச்சல் வந்தால் வழக்கத்தைவிட இருமடங்கு அதிக நீராகாரம் கொடுக்க வேண்டும். உடலின் நீர்ச்சத்தைத் தக்கவைத்தாலே மருத்துவமனையில் அட்மிட் செய்யவேண்டிய அவசியம் வராமல் தடுக்கலாம்.
குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைத் தவறாமல் போட வேண்டும். சளி பிடிக்கும்போது பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.