நாடு முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள் – யு.ஜி.சி. அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி,

நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்களை யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு பட்டியலிட்டு உள்ளது. போலி பல்கலைக்கழகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் எந்த டிகிரியையும் (பட்டம்) வழங்க அனுமதி இல்லை என கூறியுள்ளது.

இது தொடர்பாக யு.ஜி.சி. செயலாளர் மணிஷ் ஜோஷி கூறுகையில், ‘பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக ஏராளமான நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருவதாக யு.ஜி.சி.க்கு தெரியவந்துள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படவோ செல்லுபடியாகவோ செய்யாது. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை’ என தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு போலியானவை என பட்டியலிடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் டெல்லியில் மட்டுமே 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அந்தவகையில், அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், வர்த்தக பல்கலைக்கழகம் லிமிடெட், ஐ.நா. பல்கலைக்கழகம், தொழிற்கல்வி பல்கலைக்கழகம், ஏ.டி.ஆர். மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்) ஆகிய பல்கலைக்கழகங்கள் போலியானவை என அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதைப்போல உத்தரபிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. கூறியுள்ளது. இதைத்தவிர கர்நாடகா, மராட்டியம், புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளம், மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யு.ஜி.சி. கூறியுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள இந்த போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.