மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் டெல்லி அவரசச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார். முன்னதாக டெல்லியில் மாநில அரசின் நிர்வாக அதிகாரம் தொடர்பான வழக்கு ஒன்றில், `ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்க வேண்டும். குடிமைப் பணி அதிகாரிகளைக் கட்டுப்படுத்துவது உட்பட மற்ற அனைத்து அதிகாரங்களும் டெல்லி அரசுக்கு உண்டு’ எனத் தீர்ப்பளித்தது. பின்னர் அடுத்த நாளே, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (NCCSA) உருவாக்குவதற்கான மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இதில், மக்களால் தேர்ந்தெடுப்பட்ட அரசை விடவும், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கே அதிகாரம் இருப்பதாக கெஜ்ரிவால் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்துவருகிறார். இதற்காகவே எதிர்க்கட்சிகளைச் சந்தித்து வந்த கெஜ்ரிவால், காங்கிரஸும் இதனை எதிர்த்தால் தான் கூட்டணியில் இணைவோம் என்ற நிபந்தனை முன்வைத்தார். பின்னர் காங்கிரஸும் இதற்குச் சம்மதிக்கவே எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணியில் ஆம் ஆத்மி இணைந்தது. இவ்வாறிருக்க, இந்த அவரசச் சட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த செவ்வாயன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அதோடு, `டெல்லியைப் பொறுத்தவரை, எந்தவொரு சட்டத்தையும் கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு அரசியலமைப்பு முழு உரிமை வழங்குகிறது’ எனப் பேசினார்.
இந்த நிலையில், கூட்டணியில் இருப்பதால் ஆம் ஆத்மின் ஊழலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டாம் என்றும், மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு ஆம் ஆத்மி காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்காது என்றும் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
மக்களவையில் டெல்லி அவரசச் சட்டம் குறித்து இன்று பேசிய அமித் ஷா, “இந்த அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிக்கிறது. இது டெல்லி தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்துக்கு உரிமை உண்டு எனக் கூறுகிறது. டெல்லிக்கான சட்டங்களை உருவாக்க மத்திய அரசை அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பில் விதிகள் இருக்கின்றன. இருந்தாலும், நீங்கள் (எதிர்க்கட்சிகள்) கூட்டணியில் இருக்கின்ற ஒரே காரணத்தால், டெல்லியில் நடக்கும் ஊழல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம்.
டெல்லியில் 2015-ல் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தது. அவர்களின் ஒரே நோக்கம் போட்டிப்போடுவதே தவிர, சேவை செய்வது அல்ல. அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் ஆகியவை அவர்களுக்குப் பிரச்னையல்ல, ஊழலை மறைக்க விஜிலென்ஸ் துறையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் கொண்டுவர வேண்டும் என்பதுதான் பிரச்னை. நேரு, படேல், ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர் போன்றவர்கள் டெல்லி முழு மாநில அந்தஸ்து பெறும் யோசனைக்கு எதிராக இருந்தார்கள். எனவே காங்கிரஸுக்கு ஒன்றைச் சொல்கிறேன், இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு ஆம் ஆத்மி உங்களுடன் எந்தக் கூட்டணியிலும் இருக்காது” என்றார்.