தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், டெல்லி, ஜார்க்கண்ட் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்குமிடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. மத்திய அரசால் ஆளுநர்களாக நியமிக்கப்பவர்கள், மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற பிரச்னை சமீபகாலமாக தீவிரடைந்திருக்கிறது. அந்த வகையில், டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் நடைபெற்றுவருகிறது.
இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அந்த வழக்கில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு காவல்துறை, நில அதிகாரம், பொது உத்தரவு ஆகியவை தவிர, மற்ற எல்லா அதிகாரங்களும் உண்டு’ என்று கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பு, மத்திய பா.ஜ.க அரசுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
ஆகவே, அந்தத் தீர்ப்பு வெளியான ஒரு வாரத்தில் ‘டெல்லி உயரதிகாரிகள் நியமன அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதிகாரிகள் நியமனம், பணி மாறுதல் ஆகியவை தொடர்பான அதிகாரத்தை மீண்டும் ஆளுநரிடமே வழங்கும் வகையில் அது கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அவசரச் சட்டத்துக்கு மாற்றாக ‘டெல்லி நிர்வாக திருத்த மசோதா’வை மத்திய அரசு கொண்டுவந்தது. நாடாளுமன்ற மக்களவையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, மசோதாவை பா.ஜ.க அரசு நிறைவேற்றிவிட வாய்ப்பு இருப்பதால், மாநிலங்களவையில் அந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார். அதற்காக, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்தார் கெஜ்ரிவால்
காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தாலும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உடனடியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. மேலும், ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி டெல்லி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் கறார் காண்பித்தார்கள். ஆனாலும், ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பதென்றும், மசோதாவை எதிர்ப்பதென்றும் காங்கிரஸ் முடிவெடுத்தது.
மக்களவையில் டெல்லி நிர்வாக திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது பேசிய காங்கிரஸ் மக்களவைக்குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ‘இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டால், பிற மாநில அரசுகளின் அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துவிடும்’ என்றார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ-வில் இடம்பெறாத ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எம்.பி-க்கள் மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. அதையடுத்து, குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் மசோதா நிறைவேறியது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். எனவே, மக்களவையில் மசோதா நிறைவேறியதால் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு என்று கருத முடியாது.
இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அங்கு, ஆளும் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், இந்த மசோதாவை எப்படி நிறைவேற்றப்போகிறார்கள் என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அங்கு, பா.ஜ.க எம்.பி-க்கள் 94 பேர் உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 110-க்கும் அதிகமான எம்.பி-க்கள் இருக்கிறார்கள். ஆளும் கூட்டணியில் இடம் பெறாத ஒட்டுமொத்த எம்.பி-க்களின் எண்ணிக்கை 125-க்கும் அதிகமாக உள்ளது.
இவர்களில் பிஜு ஜனதா தளமும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸும் மசோதாவை மக்களவையில் ஆதரவு அளித்திருக்கின்றன. தலா ஒன்பது எம்.பி-க்களை வைத்திருக்கும் இந்தக் கட்சிகள் மாநிலங்களவையிலும் மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும். ஒரு எம்.பி வைத்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சி, மசோதாவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதென்று ஏழு எம்.பி-க்களை வைத்திருக்கும் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி முடிவுசெய்திருக்கிறது.
ஒரு எம்.பி-யை வைத்திருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒரு எம்.பி இருக்கிறார். இந்த கட்சி, பா.ஜ.க-வை ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. எனவே, அதன் எம்.பி மசோதாவை ஆதரிக்க வாய்ப்பு இருக்கிறது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பலம் இருந்தாலும், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் எம்.பி-க்களின் ஆதரவை வைத்து எப்படியாவது மசோதாவை பா.ஜ.க நிறைவேற்றிவிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.