மதுரை: “தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. 2026-ல் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து பாமக தேர்தலை சந்திக்கும்” என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் நெய்வேலி நிறுவன முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், பாதுகாப்பு கருதி பாமகவைச் சேர்ந்த 18 பேர் மதுரை மத்திய சிறைக்கும், நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சிலரும் மாற்றப்பட்டனர். இவர்களை நேரில் சந்திக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை காலை பாளை யங்கோட்டை சிறைக்கு சென்று, சந்தித்தனர்.
இதன்பின், மதுரை மத்திய சிறைக்கு அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஜிகே. மணி உட்பட 4 எம்எல்ஏக்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழுவினர் முன் அனுமதி பெற்று, ஜெயிலர் அறையில் சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் முன்னிலையில் அவர்களை சுமார் 15 நிமிடம் சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி கூறியது: “மக்களுக்காக போராடிய பாகமவை சேர்ந்த 55 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிக்க வேண்டும். என்எல்சிக்காக தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. நிலக்கரி எடுத்த பிறகு நிலங்களை அழிக்கின்றனர். தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என முதல்வர் 3 மாதத்துக்கு முன்பு அறிவித்தார். தற்போது 3 போகம் விளையும் விளை நிலங்கள் அழிக்கப்படுகிறது. என்எல்சி 3வது சுரங்கம் அமையுமா அல்லது அமையாதா என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. என்எல்சி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்கிறது.
ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை பெரியது. சாதாரண வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு விபரம் தெரியவில்லை. ராகுல் காந்தி வழக்குக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை.
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. 2026-ல் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து பாமக தேர்தலை சந்திக்கும். அமலாக்கத்துத் துறை சட்டத்துக்கு உட்பட்டு செயல்படவேண்டும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, சிறைக்குள் செல்லும்போது, பாமக பொருளாளர் திலகபாமாவை அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து போலீஸாருடன் பாமகவினர் வாக்குவாதம் செய்தனர். பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி, மாநில பொருளாளர் திலகபாமா, எம்எல்ஏக்கள் வெங்கடேசன், அருள், சதாசிவம், சிவக்குமார், வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.