நீ யாரு…? – குணசீலத்துக் கதை – 5 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

‘திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்’. என்ற நம்மாழ்வார் வாக்குப்படிக், குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர், பெயர் எல்லாம் மாற்றி, கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களுக்குக் கட்டுரையாய் சொல்வதை விட  கதாபாத்திரங்கள்  மூலம்,  மனநல பாதிப்புகளையும்,  அதனை எப்படிச் சரி செய்து கொள்ளலாம் என்ற  விழிப்புணர்வையும்  ஊட்டுவதே  இந்தக்  குணசீலத்துக்  கதைகளின்  நோக்கம்.

“பீம்… பாம்… பீம்… பாம்… பீம்… பாம்… பீம்… பாம்… பீம்… பாம்…”

‘ரயில்வே கேட்’ மூடப்படுவதற்கு முன், எச்சரிக்கை சைரன் அலறிக்கொண்டிருந்தது அம்பர் நிற விளக்கு மின்னியது.

ஹூண்டாய், மாருதி, ஆட்டோ, மொபெட், ஸ்ப்ளண்டர், ஸ்கூட்டி பெப்… என பல்வேறுபட்ட வாகனங்களில், பல்வேறு வயது ஆண்களும் பெண்களும், குறுக்கும் நெடுக்குமாய் அவசரஅவசரமாக ரயில்வேத் தண்டவாளங்களைக் கடந்து கொண்டிருந்தார்கள்.

கேட்கீப்பர், தடுப்புக்குழாய்க்கடியில் தோரணம் கட்டியதைப்போல இருக்கும் ‘கேட்’டை இறக்குவதற்காக, அதை இயக்கும் லிவர் அருகில் வந்து நின்றார்.

‘கேட்’டின் இரண்டு புறமும் பார்த்தார்.

“ஃப்ரீ…………………..ரீ……………..ரீ…….ரீ…” – வாகன ஓட்டுனர்கள் எழுப்பிய பல்வேறு சைரன் அலறல்களையெல்லாம் மீறி ஒலிக்குமாறு விசில் ஊதினார்.

‘கேட் மூடப்போகிறேன். யாரும் கடந்துவிடாதீர்கள்…!” – என்ற கடைசீ அறிவிப்பு அது.

கீப்பரின் உதடுகளில் சிக்கியிருந்த விசில் தொடர்ந்து ஒலித்துகொண்டேயிருந்தது. பூட்டைத் திறக்கக் குனிந்தபோது விசில் சத்தம் மங்கி ஓய்ந்தது.

சிலுவைக்குறிபோலிருந்த சாவியைப் போட்டு வலது கையால் இடதுபுறமாகத் திருப்ப, ‘க்ளக்’ என ‘லாக்’ திறந்தது.

Representational Image

‘கியர்’ மாற்றுவதற்கு முன் க்ளர்ச் அழுத்தும்’ மெக்கானிசம்தான் இதுவும்.

ஆங்கில Y போன்ற, அதாவது, கவைப் போலப் பிரிந்து நின்ற லீவரின் கவைப் பகுதியை ஒன்று சேர்த்து அழுத்தி, ஆங்கில l போல ஒன்றிணைத்தார் கீப்பர்.

இப்போது பல்சக்கரத்திலிருந்தப் பிடிப்பு நீங்கியது.

வானத்தை நோக்கிப் பீரங்கிக் குழல்போல் நின்ற அந்த ரயில்வே கேட் மெல்ல மெல்ல நீளமான ஒரு கைகாட்டியைப் போலக் கீழே இறக்குவதற்காக பெரிய சக்கரத்தின் கைப்பிடியைப் பிடித்தபடி மெதுவாகச் சுற்ற ஆரமபிததார்.

ரயில்வே கேட், மூன்றில் ஒரு பங்கு இறங்குகிற நேரத்தில், பின்னால் ஒரு மங்கை அமர்ந்திருக்க, “பீம்… பீம்… பீம்… பீம்……”- என்று இரு சக்கர வாகனத்தின் ஹாரனை அலறவிட்டுக்கொண்டே அவசரமாய்க் கடக்கும் நோக்கத்தில் வந்த இளைஞன், ரயில்வே ட்ராக் எங்கும், குதறிக் கிடந்த குண்டுக் குழிகளில் ஏறியிரங்கி, மறுபுற கேட்டைக் கடந்துவிட்டான்…

“கீ………………………………….” என்று விடாமல் அலறிப்புடைத்தபடி கேட் மூடுவதற்குள் கடந்துவிடவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் படு வேகமாய் எதிரே வந்த புல்லட்டில் பலமாய் மோதினான்.

கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிய அவஞ்சர் இடப்புறம் சாய்ந்து நிலைதடுமாறி விழுத்தது.

பின்னால் அமர்ந்திருந்த வாணி தூக்கியெறிப்பட்டாள்.

கூட்டம் கூடிவிட்டது.

“அப்படி என்ன கட்டைல போறதுக்கு அவுசரம்…?”

“பின்னான பொம்பளைய ஒக்காத்திவெச்சிக்கிட்டு, இப்படித்தான் தலைகால் தெரியாம போவானுவ. ஹீரோயிசத்தைக் காட்டுவானுவ…!”

“பாத்தா புருசம் பொஞ்சாதி போலத் தெரியுதுங்க…!”

புருசம்பொஞ்சாதியோ…?…, தள்ளிக்கிட்டு வந்த கிராக்கியோ?”

ஒருத்தி ஸ்கூட்டி பெப்பை ஓரமாக நிறுத்தி சைடு ஸ்டாண்ட் போட்டாள்.

Representational Image

வாணி அடிபட்டுக் கீழே கிடப்பதைப் பார்த்தாள். இடுப்பில் கை வைத்தபடி, ஒரு புன்சிரிப்புச் சிரித்தாள். விழுந்தவளைக் கண்டு ரசித்தாள். உடனே கிளம்பிப் போய்விட்டாள்.

“சரியான வக்ரம் பிடிச்சவளா இருப்பாப் போல…!”, என்று அவளை விமர்சித்துக்கொண்டே, மேலும் இரண்டு பாதசாரிகள் கடந்து சென்றனர்.

இப்படியெல்லாம் பேசுபவர்கள் பேச; தூற்றுபவர்கள் தூற்ற; தவிர்ப்பவர்கள் தவிர்க்க, கர்மயோகிகளாகச் செயல்பட்டார்கள் சிலர்.

‘அவஞ்சரை’ ஒருவர் தூக்கி நிறுத்தி ஸ்டாண்ட் போட்டார்.

பரமசிவத்தை ஒருவன் தூக்கிவிட்டான்.

கனுக்கை ‘புஸ்ஸென வீங்கிவிட்டது அவனுக்கு.

எவரோ அதன் மேல் ஐஸ் தண்ணீரைக் கொட்டினார்.

வேறு ஒருவர், புல்லட்டைத் தூக்கிவிட்டார்.

அவனுக்கு அடி அதிகமில்லை.

“ரெண்டு பேரு மேலயும்தான் தப்புருக்கு. நீ ‘டபக்’குனு போயிறு…!” என்று புல்லட்டை பச்சைக் கொடிக்காட்டி அனுப்பினான் ஒருவன்.

‘எங்கே பிரச்சனைன்னாலும், நம்ம சமூகத்து ஆளைக்கண்டா மொதல்ல தப்பிக்க விட்ரு..’- அடிக்கடிச் சொல்லும் தன் தலைவரின் வாக்கைக் காப்பாற்றிய பெருமையோடு, அப்பால் நகர்ந்தான் அவன்.

அடுத்த பாட்டம், ‘ரயில்வே கேட்’ முன் வாகனங்கள் ஒவ்வொன்றாகச் சேரத் தொடங்கின.

தூக்கி எறியப்பட்ட வாணியைப் பெண்கள் சிலர், எழுப்பி உட்கார வைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்து, விரல்கள், முழங்கை, தோள் பட்டைகளை அமுக்கிவிட்டு ஆசுவாசப்படுத்தினர்.

எவரோ கொடுத்த தண்ணீரால், தொண்டையை நனைத்தபின் கொஞ்சம் படபடப்பு அடங்கியது….

“ஒண்ணுமில்ல எழுந்திருங்க…! கை காலை உதறுங்க…! ” என்றெல்லாம் நம்பிக்கைத் தரும் விதத்தில் பேசி, தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்பிவிட்டனர் சிலர்.

எழுந்து நின்ற வாணி ‘திருக் முருக்’ எனத் திருவிழாவில் காணாமல் போன அந்தக் காலத்துக் குழந்தையைப் போல விழித்தாள்.

Representational Image

அந்த நேரத்தில் ஒரு சரக்கு ரயில் ஓரளவு மையமான வேகத்தில் கடந்து சென்றது.

வாணி…! வாணி…!”

அரற்றிக்கொண்டேக் கால் தாங்கிக் தாங்கி அவளரருகில் வந்தான் பரமசிவம்.

“வாணி, என்னடா ஆச்சு… சாரிடா…!”

சொற்கள் துயரத்தின் கனத்துடன் வெளிப்பட்டது.

மெதுவாகக் கையைத் தொடப் போனான். கைகளை உதவிக் கொண்டாள்.

“டேய்… கை வைக்காதே, நீ யாரு?”

பெரிதாய்க் கத்திவிட்டு மயக்கமுற்றாள் வாணி.

“சொன்னேன்ல, தள்ளிக்கிட்டு வந்த கிராக்கிதான்..னு”

முன்பே சொன்னவள், அதை நிரூபணம் செய்த மகிழ்ச்சியில் மந்தஹாசித்தாள்.

தன் கைப்பேசியில் வைத்திருந்த திருமண புகைப்பட ஆல்பத்தை எடுத்துக் காட்டி, ‘இவள் என் மனைவிதான்’ என்று அந்த சமூக சேவகர்களுக்கு நிரூபித்தபின், ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது, பரமசிவத்துக்கு.

வாணி பரமசிவம் இருவரின் சிராய்ப்புகளையும் துடைத்து, மருந்திட்டு சிகிச்சைகள் முறையாக நடைபெற்றன..

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துச் சுயநினைவுக்கு வந்தாள் வாணி.

“வாணி.. எப்படிமா இருக்கே…?”

“நீ யாரு? எதுக்கு என்னையே சுத்தி வர்றே? என் புருசன் மனோகர் எங்கே?”

மருத்துவமனை என்றுகூடப் பார்காமல், பலமாய்க் கத்தினாள் வாணி.

மீண்டும் மயக்கமாகிவிட்டாள்.

Representational Image

பரமசிவத்துக்கு அவமானமாய் இருந்தது. ‘மண்டை குழம்பிவிட்டதா வாணிக்கு?’ ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.

மருத்துவர், செவிலியர்கள் அனைவரும் பரமசிவத்தை அற்பப் புழு போலப் பார்த்தார்கள்.

பரமசிவம் கைப்பேசியில் இருந்த திருமண ஆல்பத்தை எடுத்து காட்டியும், தன் அலுவலக விபரங்களையும் சொன்னவுடன்தான் மருத்துவரும் மற்றவரும் அவனை நம்பினார்.

“ஓகே சார்; இது சைக்கியாட்ரிஸ்ட் டீல் பண்ண வேண்டிய கேஸ்; ஏற்பாடு பண்றேன்; விரைவா வந்துருவாரு. டோன்ட்ஒர்ரி…!”- என்றார் அந்தப் பொது மருத்துவர்.

மனநல மருத்துவர் நவீனன் வந்தார்.

பரமசிவம் சொன்ன விவரங்களை உள் வாங்கினார்.

“இது அவங்களுக்கு செகண்ட் மேரேஜ்ஜா?”

“இல்லை டாக்டர்..”

“உங்க கூட சகஜமா இருக்காங்களா?”

“என்கிட்டே உயிரா இருப்பா டாக்டர்..?”

“கல்யாணத்துக்கு முன்னால மனோகர்னு யாரையாவது காதலிச்சிருப்பாங்களோ?”

‘மனோகர்…! மனோகர்…!” என்று அவ்வப்போது முணுமுணுத்தபடி கிடக்கும் வாணியைப் பார்க்கப் பார்க்க பரமசிவத்துக்குப் பேரதிர்சியாக இருந்தது.

மனநல ஆலோசகர் வரதராஜனை வரவழைத்தார் நவீனன்.

இருவரும் இணைந்து அறிதுயிலென்ற ‘ஹிப்னாடிசம்’ முறையில் விவரங்களைச் சேகரித்தனர்.

“மிஸ்டர் பரமசிவம்…”

“சொல்லுங்க டாக்டர்…”

“ உங்க மனைவியோட முதல் கணவர்தான் மனோகர். திருமணம் ஆகிய மறுநாளே புதுக் கணவனோடு ஸ்கூட்டரில் சென்றநேரத்தில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.”

“என்ன சொல்றீங்க டாக்டர்…?”

“மீதியை இவர் சொல்வார்…!” என்று மனநல ஆலோசகர் வரதராஜனைச் சுட்டிக் காட்டினார் நவீனன்.

“சார். என்கிட்டே உயிரா இருக்கற வாணி, இந்த விஷயத்தை என்கிட்டே ஏன்சார் மறைக்கணும்?”

“வாணி எதையும் மறைக்கலை? எல்லாத்தையும் மறந்துட்டாங்க…”

“இவ்ளோ பெரிய நிகழ்வை மறக்கவும் முடியுமா? எதுவும் நம்புறாப்பல இல்லையே சார்.”

அப்பா, அம்மா, மாமனார், மாமியார் அனைவருக்கும் ஃபோன் பறந்தது.

கவுன்சிலிங் ஹால் நிரம்பிப் பரபரப்பாகியது.

வாணிக்கு அப்பா, அம்மாவைத் தவிர, மாமனார், மாமியார் கணவன் பரமசிவம் யாரையுமே அடையாளம் தெரியவில்லை.

“எதுக்கும்மா இங்கே வந்துருக்கோம்… இவங்கல்லாம் யாரு? மனோகர் எங்கேம்மா?”- மீண்டும் மீண்டும் இதையேக் கேட்டுக் கொண்டிருந்தாள் வாணி.

வாணியை அந்த இடத்திலிருந்து செவிலியர்கள் மூலம் வெளியேற்றினார் மனநலஆலோசகர் வரதராஜன்.

அதிர்ச்சியிலிருந்த குடும்ப உறுப்பினர்களுடன் விலாவாரியாகப் பேசினார்.

திருமணமாகி ஒரே ஒருநாள் மனோகருடன் வாழ்ந்தவள் வாணி என்பதையும், மகாராஷ்டிராவில், ஒரு ரயில்வே-கேட் அருகில் ஏற்பட்ட விபத்தில் மனோகர் இறந்தபின் ஏற்பட்ட பேரதிர்ச்சியில் பழைய சம்பவங்கள் அனைத்தையும் மறந்துவிட்டாள் , என்ற உண்மையை அவளின் பெற்றோர் வாயாலேயே அறிந்தபோது, “தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம்..” என்கிற அதிர்ச்சியில் உரைந்தார்கள் பரமசிவமும், அவன் பெற்றோர்களும்.

“எல்லாரும் கேட்டுக்கோங்க. வாணிக்கு வந்திருக்கறது ( Disosiative Identity Disorder) னு சொல்ற தன்னிலை மறத்தல் எனும் ஆளுமைக் கோளாறு;

இது ரொம்ப ரேர் கேஸ்; திடீர்னு ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடக்கும்போது, வழக்கமா, ‘ஃபிட்ஸ்’ வரும். மயங்கிடுவாங்க;

சில நிமிஷங்களோ, சில மணி நேரங்களோ தன் நிலை மறந்து மயங்கிடுவாங்க;

நீங்க கூட வாணிக்கு மனோகரனோட திருமணமான அதிர்ச்சியைக் கேட்டு சுமார் இரண்டு மணி நேரம் மயங்கிக் கிடந்தீங்களே, அதுபோலத்தான்;

வாணி மாதிரி, ஆயிரத்துல ஒருவருக்கோ, லட்சத்துல ஒருத்தருக்கோ, இப்படி (Long term) நீண்டகால மறதி வரவாய்பிருக்கு.”

Representational Image

கவுன்சிலர் வரதராஜன் சொன்ன விளக்கத்தைக் கேட்டபிறகு, வாணியின் பெற்றோர்கள் தங்களை ஏமாற்றவில்லையென்பதைப் புரிந்து கொண்டார்கள் பரமசிவமும் அவன் பெற்றோர்களும்.

நாலு வருஷத்துக்கு முன் மனோகரனோடு ரயில்வே கேட் அருகே நடந்த டூவீலர் விபத்துக்கும், இப்போது நடந்த விபத்துக்கும் ஏதோ வகைல ஒரு தொடர்பு இருந்திருக்கு;

அன்றைய பேரதிர்ச்சி, மறக்கடிச்சிருந்ததை உங்களோட நடந்த இந்த விபத்து நினைவு படுத்திடுச்சு; மனோகர் ஸ்பாட்லயே இறந்துட்டாருன்னு கூட வாணிக்குத் தெரியாது.”

“வாணியை நிகழ்காலத்துக்குக் கொண்டுவரவே முடியாதா சார்…?” உண்மைகளை அறிந்த பரமசிவம் பரிவோடு கேட்டான்.

செய்துடலாம். ஊசியை ஊசியாலத்தான் எடுக்கணும். நாலைந்து சிட்டிங் தேவைப்படும்.. குணப்படுத்திடலாம். கவலைப்படாதீங்க.

இரண்டு சிட்டிங்குகளில் வாணிக்குப் பிடித்தவை, பிடிக்காதவை, அவள் பொழுது போக்குகள், வளர்ப்புப் பிராணிகள் என பல்வேறு செய்திகளை அவள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் தெரிந்துகொண்டார் வரதராஜன்.

“வாணியோட ஒரு நாள் கணவர், மனோகர் ஸ்பாட்ல இறந்துட்டார்ங்கற செய்தியை எந்தக் காலத்துலயும் நீங்க சொல்லவேக்கூடாது.! சொன்னாக் காம்ப்ளிகேட் ஆயிடும் ”- என்று வாணியின் பெற்றோர்களிடமும் எச்சரித்தார்.

“வாணிக்கு மிகவும் பிடித்த வளர்ப்பு நாளை கண்காணாம எங்கேயாவது கொடுத்துருங்க.”

கவுன்சிலரய்யா, அந்த நாய் மேலே ரொம்ப அன்பு வெச்சிருக்கா வாணி, அது இல்லேன்னா, ரொம்ப அப்சட் ஆயிருவா சார் வாணி..”

அதுக்காகத்தான் சொல்றேன். நாயை கண்காணாம அனுப்பிடுங்கன்னு. அந்த நாயை போட்டோ எடுத்து மேக்ஸி சைஸ்ல ஒரு போட்டோ ஒண்ணு ஏற்பாடு பண்ணுங்க…”- என்றும் கேட்டுக் கொண்டார் ஆலோசகர்.

மருத்துவமனை அருகிலேயே தனி அறை பார்த்து அதில் வாணியை வைத்துப் பராமரித்தனர் பெற்றோர்கள்.

கவுன்சிலர் சொன்னதையெல்லாம் செய்தும் கொடுத்தனர் பெற்றோரும், மற்றோரும்.

Psychology (representational image)

கவுன்சிலிங் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. “மனோகர் மனோகர்…”, என்று மூச்சுக்கு மூன்று முறை கேட்கும் வாணியிடம், “மனோகர் வந்துருவாரு…!” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கச்சொன்னார் வரதராஜன்.

கவுன்சிலிங் இறுதிகட்டத்தை எட்டியது.

“அழைக்கும்போது நீங்க மட்டும் உடனே உள்ளே வாங்க..”- என்று வாணியின் கணவர் பரமசிவத்துக்குச் சொல்லிவிட்டு, மற்ற யாரும் வந்துர வேண்டாம். என்றும் கண்டிப்பாகக் கூறினார் வரதராஜன்.

‘அறிதுயில் சிகிச்சை’ தொடங்கித் தொடர்ந்தார் சைக்காலஜிஸ்ட். 

தன் எதிர்பார்ப்பின்படி, வாணி செயல்படத்துவங்கிய நேரம், வாணியின் முன் அந்த மேக்ஸி சைஸ் புகைப்படத்தைக் காட்டிக் கேட்டார். 

“என்னோட பெட் அனிமல் (வளர்ப்புப் பிராணி)” எங்கே இருக்கு..? எங்கே இருக்கு…? என்று சந்தோஷத்துடன் பரபரத்தாள் வாணி.

“தாறுமாறா ஓடி, ரயில்வே கேட் ‘க்ராஸ்’ பண்ணும்போது அடிபட்டுச் செத்துட்டுது வாணி…” அதிர்ச்சிக்குரலில் திகில் பரப்பினார் கவுன்சிலர் வரதராஜன்.

பேரதிர்ச்சியில் மயங்கினாள் வாணி.

மயக்கதலிருந்து விழித்தபோது, வாணியின் எதிரே பரமசிவத்தை நிற்க வைத்தார்.

“என்னங்க..! உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே..?”- என்று பரமசிவத்தின் உடம்பெல்லாம் தொட்டுத் தடவி, கண்ணீர் உகுத்தாள் வாணி. 

வெளியே கண்ணாடித்தடுப்பிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இருவரின் பெற்றோரும் கண்ணீர் வடித்தனர். இது ஆனந்தக் கண்ணீர் மட்டுமல்ல. கவுன்சிலர் வரதராஜக்கு செலுத்தும் நன்றி அறிவிப்பாகவும் இருந்தது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.