பால் கூட்டுறவு கொள்கை: ஆக.25 வரை கருத்துகளை தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு

சென்னை: தமிழகத்தில் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கான பால் கூட்டுறவு கொள்கை உருவாக்குவது தொடர்பான கருத்துக்களை ஆகஸ்ட் 25-ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற பேரவை கூட்டங்கள் 2023-2024ம் ஆண்டுக்கான பால்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது பால்வளத் துறை அமைச்சரால் “தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மை கொள்கை உருவாக்கப்படும், மேலும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி ஒழுங்குமுறை மற்றும் பால்கூட்டுறவு சட்டம் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கென தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மை கொள்கை உருவாக்கப்படும். தமிழகத்தில் பால் கொள்முதலை வரைமுறைப்படுத்தவும், உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாக்கவும், வளர்ந்து வரும் தரக் கட்டுப்பாடு தொழில்நுட்பங்களை சரியான முறையில் ஒழுங்குபடுத்தவும், பால் கூட்டுறவு சங்கங்கள் நலிவடையாமல் லாபகரமாக இயங்குவதை உறுதிசெய்யும் வகையில் பால் கூட்டுறவு சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்படி அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பால்கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் ஆணையர் அலுவலகம், பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை, மாதவரம் பால்பண்ணை, சென்னை – 600 051 என்ற முகவரியில் கருத்துக்களை 25.08.2023-க்குள் தெரிவிக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.