மழலை பேச்சால் மோகன்லாலை ஸ்தம்பிக்க வைத்த மாலுட்டி

மலையாளத்தில் சின்னத்திரை பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுட்டிக் குழந்தை தான் மாலுட்டி. பெரிய ஆட்களே ஸ்டாண்ட் அப் காமெடி செய்ய திணறுகின்ற நிலையில் மூன்று வயது கூட ஆகாத இந்த மாலுட்டி தனது அற்புதமான காமெடி பேச்சால் பார்வையாளர்களை வசீகரித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் அவரது வீடியோக்கள் ரொம்பவே பிரசித்தம்.. மோகன்லாலின் மிக தீவிரமான ரசிகை மாலுட்டி. மோகன்லாலை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என ஆர்வமாக இருந்த மாலுட்டிக்கு சமீபத்தில் நடைபெற்ற மழவில் மனோரமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மோகன்லாலை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் சந்திப்பிலேயே நான் ஒரு பிரபலத்தின் முன்னால் நிற்கிறோம், பேசுகிறோம் என்கிற எந்த அச்சமும் பதட்டமும் இல்லாமல் தனது பேச்சால் மோகன்லாலை விழா அரங்கத்திற்கு வரும் வழியிலேயே நிறுத்தி சுமார் நான்கு நிமிடங்கள் வரை ஸ்தம்பித்து நிற்க வைத்து விட்டார் மாலுட்டி. இதுகுறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மோகன்லாலிடம் அந்த குழந்தை மாலுட்டி பேசும்போது, மோகன்லாலை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என விரும்பியதாகவும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ஒரு நாள் எப்படியும் மோகன்லாலை சந்திக்கலாம் என தனது பெற்றோர் கூறியதாகவும் அதனாலேயே தான் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள எப்படியும் மோகன்லால் வருவார் என கூறியதால் இந்த நிகழ்ச்சிக்கு நான் ஆவலுடன் வந்து காத்திருந்தேன் என்றும் கூறினார் மாலுட்டி.

தனது சொந்த ஊர் வயநாடு என்றும் அங்கே புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் அப்போது அங்குள்ள மக்களிடம் முருகனும் (புலி முருகன்) நானும் திக் ப்ரெண்ட்ஸ்.. புலியின் கொட்டத்தை அடக்குவதற்காக அவரை அழைத்து வருகிறேன் என்று அவர்களுக்கு வாக்கு கொடுத்துள்ளேன் என்றும் தனது அழகிய மழலை குரலில் பேசி மோகன்லாலை மட்டுமல்ல சுற்றி இருந்தவர்களையும் பிரமிக்க வைத்தார்.

அப்போது மோகன்லால் உன்னை பார்ப்பதற்காக நான் வயநாடு வரட்டுமா என்று கேட்க, அதற்கு மாலுட்டி, “தேவையில்லை நான் கொச்சி வந்து இங்கே ஹோட்டலில் தங்கும் போது சொல்கிறேன்.. அப்போது வந்து பார்த்தால் போதும்” என்று கூற மோகன்லால் உட்பட சுற்றி இருந்த அனைவருமே சிரித்து விட்டனர்.

மேலும் தன்னிடம் கேள்வி கேட்பவர்கள் அனைவரும் மோகன்லால் தான் பிடிக்குமா, மம்முட்டியை பிடிக்காதா என்று கேட்கிறார்கள் என்றும் அவர்களிடம் ஒருவருக்கு சிக்கன் பிரியாணி ரொம்பவே பிடிக்கும் என்பதற்காக மட்டன் பிரியாணி பிடிக்காது என்று சொல்ல முடியுமா ? அதுபோல மம்முட்டியையும் எனக்கு பிடிக்கும் என்றும் ஆனால் அவரை நேரில் பார்த்தால் கூட அவரிடம் லாலேட்டனை பார்க்க வேண்டும் என்றுதான் அவரிடமும் கோரிக்கை வைப்பேன் என்றும் கூறி மோகன்லாலை அசர வைத்து விட்டார் இந்த சுட்டிக் குழந்தை மாலுட்டி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.