அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் கவனமாக பேச வேண்டம் என்றும் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ராகுல் காந்தி மீண்டும் எம்பியாக நீடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நீதி வென்றுள்ளது, குற்றவியல் அவதூறு வழக்கில் அன்பு சகோதரர் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார் .
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, நமது நீதித்துறையின் வலிமை மற்றும் ஜனநாயக பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என்றும் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியையும் அத்தொகுதி மக்களையும் தனது குடும்பம் என கூறி வந்தார் ராகுல் காந்தி. தற்போது ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதி எம்பி ஆகியுள்ளதல் அத்தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.