ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில், குஜராத்தின் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டாண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது. கடந்த மார்ச்சில் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அடுத்து உடனடியாக, எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் வாங்கிய ராகுல் காந்தி, தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். ஆனால், உயர் நீதிமன்றமோ ராகுல் காந்தியின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. அதைத் தொடர்ந்து, தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது.
முன்னதாக இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் சூரத் நீதிமன்றத்துக்கு, “ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது ஏன்… இந்தத் தண்டனையின் காரணமாக ஒரு தனிநபரின் உரிமை மட்டுமின்றி, ஒரு தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகுமளவுக்கு தண்டனைக்குரிய காரணம் பொருத்தமானதா… இதற்கு நீதிமன்றமும், மனுதாரரும் பதிலளிக்க வேண்டும்.
ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 21-ம் தேதி விசாரிக்கப்படும்” என்று கூறி, ராகுல் காந்திமீதான சிறைத் தண்டனையை நிறுத்துவைத்து உத்தரவிட்டது. இதன் மூலம், ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், ஆளும் பா.ஜ.க அரசின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக வரும் 8-ம் தேதி விவாதம் நடக்கவிருக்கிறது. அதில், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பங்கேற்க முடியுமா என்பது பெரும் கேள்வியாக நிற்கிறது.
ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பணியை மீட்டெடுப்பதற்கு, உச்ச நீதிமன்றம் தனது தண்டனை நிறுத்தி வைத்திருக்கிறது எனவும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீட்டெடுக்க வேண்டும் எனவும் லோக் சபா செயலகத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அது தொடர்பான அறிக்கையையும் வெளியிட வேண்டும். அப்படி கொடுத்தால் உடனே பதவியை மீட்க முடியுமா என்ற கேள்விக்கு, இதே போன்று பதவி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பதவி வழங்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி முகமது ஃபைசல் வழக்கை மீள் கண்ணோட்டமாகப் பார்க்கலாம். லட்சத்தீவு தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் முகமது ஃபைசல்.
2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, இவருக்கும் லட்சத்தீவு முன்னாள் எம்.பி-யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மறைந்த பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சலே என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த முகமது சலே விமானம் மூலம் கொச்சி கொண்டுவரப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து முகமது ஃபைசல், அவரின் சகோதரர்கள் உட்பட சிலர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கில் ஃபைசல் குற்றவாளி என லட்சத்தீவு நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியது.
இதையடுத்து 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, கடந்த ஜனவரி 13-ம் தேதி அவர் மக்களவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். முகமது ஃபைசல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், கடந்த ஜனவரி 25-ம் தேதி அந்தத் தீர்ப்புக்குத் தடை விதித்தது. இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது அவரின் தகுதிநீக்கத்தை மக்களவைச் செயலகம் ரத்துசெய்திருக்கிறது. இதன் மூலம் மீண்டும் லட்சத்தீவு எம்.பி-யாக ஃபைசல் தன் பணியைத் தொடர்கிறார்.
அந்த வகையில், காங்கிரஸ் தரப்பும் நேரத்தை வீணடிக்காமல், உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான ஒரு மணி நேரத்துக்குள், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து, ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவியை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை திரும்பப் பெற்றால், நாளையே ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் எனக் கூறப்படுகிறது.