குருகிராம்: ஹரியாணாவில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, நூ மாவட்டத்தில் சுமார் 250 குடிசைகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன.
ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட கலவரங்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் தொடர்பாக 141 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த கலவரம் அருகில் உள்ள குருகிராமுக்கும் பரவியது. குருகிராமின் பட்டோடி பகுதியில் முழு அடைப்புக்கு இந்து அமைப்புகள் விடுத்த அழைப்பை அடுத்து, அங்கு இன்று கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், நூ மாவட்டத்தின் தாரு நகரில் சுமார் 250 குடிசைகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. இவை, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை என்றும், வங்கதேசத்தில் இருந்து வந்த ‘சட்டவிரோத குடியேறியவர்களின்’ குடிசைகள் என்றும், இவர்கள் அசாமில் இருந்து வந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் வழக்கமான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தக் குடிசைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதற்கும் கலவரத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் நூ துணை ஆணையர் பிரஷாந்த் பன்வார் தெரிவித்துள்ளார்.