வயநாடு தொகுதி மக்கள் பெருமூச்சு… திரும்ப வந்த ராகுல் காந்தி… மீண்டும் பறக்கும் காங்கிரஸ் கொடி!

2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதி கைவிட்ட போது, ராகுல் காந்தியை காப்பாற்றியது கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதி தான். தெற்கில் இவர் நின்ற முதல் தொகுதி. ஏற்கனவே காங்கிரஸின் கோட்டையாக இருந்ததால் ராகுலின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தது. ஆனால் இந்த வெற்றியை பலனாக தொகுதி மக்களுக்கு தேவையானதை செய்தாரா ராகுல் காந்தி என்பது கேள்விக்குறியாக வந்து நிற்கிறது.

வயநாடு எம்.பி ராகுல் காந்தி

ஏனெனில் டெல்லியை சுற்றியே அரசியல் களத்தை நகர்த்தி வந்தவர், வருபவர் ராகுல் காந்தி. அமேதி தொகுதியும் அப்படித்தான். இந்நிலையில் தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொகுதிக்கு தொடர்ச்சியாக பயணிப்பதும், அரசியல் முக்கியத்துவம் அளிப்பதும் சிரமமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி நேரடியாக தொடங்கி வைத்த நலத்திட்ட உதவிகள் என்பது குறைவாக தான் இருக்கும் என்கின்றனர்.

இரண்டு ஆண்டுகள் சிறை

இந்நிலையில் மோடி குறித்த அவதூறு வழக்கில் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தகுதி நீக்க அடிப்படையில் தனது எம்.பி பதவியை இழந்தார். இதையடுத்து வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்னும் ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் இடையில் ஒரு தேர்தலா?

உச்ச நீதிமன்றம் அதிரடி

அதற்கான பிரச்சாரம், செலவு, வேட்பாளர் தேர்வு, வெற்றிக்கான வியூகம் போன்றவற்றை நினைத்தாலே அரசியல் கட்சிகளுக்கு தலை சுற்றிவிடும். ஏனெனில் குறுகிய காலகட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு தேர்தல்கள். இப்படி ஒரு நிலைக்கு தான் உச்ச நீதிமன்றம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ராகுல் காந்தியின் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.

வயநாடு மக்கள் ஹேப்பி

கீழமை நீதிமன்றத்தை பார்த்து எதற்காக அதிகபட்ச தண்டனை என்ற கேள்வியை மட்டும் எழுப்பி, பொறுப்புள்ள அரசியல்வாதியாக நடந்து கொள்ளுங்கள் என்று ராகுல் காந்திக்கு சில அறிவுரைகள் வழங்கினர். இந்த உத்தரவை கேட்டதும் வயநாடு மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

மீண்டு வந்த ராகுல்

நாங்கள் பார்த்து பார்த்து வாக்களித்து தேர்வு செய்த எம்.பி மீண்டும் கிடைத்துவிட்டார் என உற்சாகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். மீண்டும் வந்தது ராகுல் காந்திக்கும் மகிழ்ச்சியாக தான் இருக்கும். அதேசமயம் அவர் வயநாட்டிற்கு இனியாவது முக்கியத்துவம் கொடுத்து போதிய நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

புதிய உற்சாகம்

ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி என்பது வெறும் வயநாடு தொகுதி உடன் முடிந்து விடாது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த உத்வேகம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் குளறுபடிகளை போட்டு உடைத்து மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்க கிடைத்திருக்கும் புத்துயிர் என புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.