புதுடெல்லி: தேனி அதிமுக எம்.பி.யும், ஓபிஎஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார்வெற்றி பெற்றது செல்லாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனைவிட 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்க கோரி அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ‘ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் மற்றும் வங்கிக் கடன் போன்ற பல்வேறு விவரங்களை மறைத்துள்ளார். வாணி பின்னலாடை நிறுவனத்தில் இயக்குநராக இருந்தபோது வாங்கிய சம்பளம், வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பதை மறைத்துள்ளார்.
விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்தாக கூறிய நிலையில், வட்டிதொழில், ரியல் எஸ்டேட் தொழில் மூலம்கிடைத்த வருமானத்தையும் மறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெற்றுள்ளார்’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ‘‘தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது. அத்தொகுதியை காலியாக அறிவிக்க வேண்டும்’’ என்று தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஜூலை 6-ம் தேதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், அதுவரை இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என நீதிபதியிடம் ரவீந்திரநாத்தின் வழக்கறிஞர் பி.ராஜலட்சுமி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, இத்தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ரவீந்திரநாத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சூர்யகாந்த், திபாங்கர் தத்தா அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, ‘‘வேட்புமனுவில் தகவல்களை மறைத்த காரணத்தால் மனுதாரர் வெற்றிபெற்றது செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தவிர மனுதாரர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார் என கூறவில்லை. தேர்தல் வழக்கின் தன்மையை சரியாக புரிந்து கொள்ளாமல் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்’’ என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தனர். எதிர்மனுதாரர்களான மிலானி, தங்கதமிழ்செல்வன், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.