மதுரை: அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
இது குறித்து அவர் அறிக் கையில் கூறியதாவது: பாரதிய ஜனதா ஒரு தேசிய கட்சி. அந்தக் கட்சியின் கூட்டணி உட்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள்தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப் படையில்தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷாவும் முக்கியம் என்றேன்.
நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரே ஆண்டில் தலைவராகப் பதவியேற்று இருக்கிறார். ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர், வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆனேன்.
அதே போல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர், இன்றைக்கு அதி முகவின் அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு எல்லாப் பதவிகளும் படிப்படியாகத்தான் வந்தன.
என்னைப் பொருத்தவரை அண்ணாமலையின் கருத்துகளை நான் பொருட்படுத்துவதில்லை. எங்கள் மீது துரும்பு எறிந்தால்கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம்.
தமிழகத்தில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுகதான். அதிமுகவை விமர்ச்சிப்பவர்கள், தமிழக அரசி யலில் தங்களுக்கான இடம் என்ன என்பதனை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.