புதுடெல்லி: அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் வந்தது எப்படி’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்துவிட்டதாக, குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதி இழப்பு செய்யப்பட்டார். இதை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, சஞ்சய் குமார் அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராகுல் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது: வழக்கு தொடர்ந்த பர்னேஷ் மோடியின் உண்மையான பெயர்மோடி அல்ல. அவர் மோத் வணிகசமாஜ் சமூகத்தை சேரந்தவர்.அவர்தனது பெயரை மாற்றியுள்ளார். ராகுல் தனது பேச்சில் குற்றம்சாட்டிய யாரும் வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்தவர்களும் மோடி சமூகத்தினர் அல்ல.
அவதூறு வழக்குகள் முழுவதும் பாஜக தொண்டர்களால் தொடரப்பட்டவை. அவற்றில் ராகுலுக்கு எந்த தண்டனையும் விதிக்கப்படவில்லை. அவர் கொடிய குற்றவாளி அல்ல. ஒழுங்கீனமான குற்றங்களில் அவர் ஈடுபடவில்லை.
அவர் மீதான குற்றச்சாட்டு தண்டனைக்குரிய குற்றம் அல்ல. சமூகத்துக்கு எதிரான குற்றமோ, கடத்தலோ, வன்கொடுமையோ, கொலை குற்றமோ அல்ல. அந்த குற்றச்சாட்டு ஜாமீனில் வரக்கூடியது, இரு தரப்பினரும் பேசி தீர்க்கக்கூடியது. ஆனாலும், அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற எந்த வழக்கிலும், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது இல்லை. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைதண்டனைக்கு தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் அவரால் நாடாளுமன்றம் செல்ல முடியும். இவ்வாறு சிங்வி வாதிட்டார்.
பின்னர், நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்கில் விசாரணை நீதிமன்ற நீதிபதி அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துவிட்டார். ஒரு நாள் குறைவாக விதித்திருந்தாலும், எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு ஆகியிருக்க முடியாது. இந்த தகுதி இழப்பால் ஏற்பட்ட விளைவுகள் தனிநபர் உரிமையை மட்டுமின்றி, அவரதுதொகுதி மக்களையும் பாதித்துள்ளது. எனவே, 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
அதேநேரம், பிரச்சார கூட்டத்தில் மனுதாரர் பேசியது சரியானது அல்ல. பொதுவாழ்வில் இருப்பவர் இதுபோல பேசக் கூடாது. மனுதாரர் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து: தீர்ப்புக்கு பிறகு, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்திக்கு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மலர்க் கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி கூறியபோது, ‘‘இத்தீர்ப்பைவரவேற்கிறோம். செஷன்ஸ் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை தொடர்வோம்’’ என்றார்.