சென்னை: கிராமிய விளையாட்டுத் திருவிழாவான ‘ஈஷா கிராமோத்சவம்’ வரும் 12-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் கிராமப்புற இளைஞர்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிராம மக்களின் வாழ்வில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஈஷா யோக மையத்தின் அவுட்ரீச் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தென்னிந்திய அளவிலான கிராமிய விளையாட்டுத் திருவிழா ‘ஈஷா கிராமோத்சவம்’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
ரூ.55 லட்சம் பரிசு: இந்த ஆண்டு முதன்முதலாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற உள்ளது. இவற்றில் 25ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசு வழங்கப்படும்.
இது தொடர்பாக ‘ஈஷா கிராமோத்சவம்’ குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி நகுஜாசென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈஷாவின் 15-வது கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், 151 இடங்களில் 3கட்டங்களாக நடத்தப்பட உள்ளன.ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கி வரும்செப். 23-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிராமத் திருவிழாவில், ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக்கான எறிபந்து, இருபாலருக்குமான கபடி போட்டிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த அணிகள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். 14-வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம்.
மேலும், கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. திருவிழாவில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் கிடையாது. அனுமதி இலவசம். தமிழகத்தில் மட்டும் 67 இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் https://isha.co/gramotsavam-tamil என்ற இணையதளத்தில் வரும் 10-ம்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.