கனவு – திருச்சி மாவட்டம்
நவீன வாழ்க்கை முறையால் அடிப்படையான வேலைகளைக்கூட செய்ய நேரமில்லாமல் பலரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக, சமையல் செய்வது, துணிகளைத் துவைப்பது, சமைத்த பாத்திரங்களைக் கழுவுவது, துணிகளை அயர்னிங் செய்வது உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மேற்சொன்னவற்றில் பலவற்றைச் செய்து தர, இயந்திரங்களும் தனியார் சேவை நிறுவனங்களும் உருவாகிவிட்டபோதிலும், துணிகளைத் துவைப்பது மட்டும் இப்போதும் பலருக்குச் சவாலாகவே இருக்கிறது. குறிப்பாக, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் வெளியூர்களில் விடுதிகளில் தங்கிப் பணியாற்றும் இளையோர்களுக்கு இந்தச் சிரமம் இருக்கிறது.
இதற்குத் தீர்வு கண்டிருக்கிறது அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸ் (Illinois) மகாணத்தில் இயங்கிவரும் “தி வொல்ட்ஸ் லார்ஜஸ்ட் லாண்ட்ரோமட்” (The World’s Largest Laundromat) எனும் பெயர் கொண்ட நிறுவனம். இதுதான் உலகின் மிகப்பெரிய லாண்ட்ரி சென்டர். இது சுமார் 13,500 சதுர அடியில் அமைந்திருக்கிறது. இங்கே 140 சலவை இயந்திரங்களும் 170 டிரையர்களும் இருக்கின்றன. இந்த நிறுவனத்துக்குள்ளேயே உணவகம், சிறிய நூலகம், தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றன. இந்த இயந்திரங்களில் குறைந்த துணிகள் மற்றும் அதிக துணிகள் என ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு கட்டணங்களை நிர்ணயம் செய்து, வசூலிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் பிசினஸ் மாடலைப் பின்பற்றி, திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்திலும் துணி துவைக்கும் இயந்திரங்களை நிறுவலாம். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தது கல்லூரிகளுக்கு 10 இயந்திரங்கள், அதிகபட்சமாக பல்கலைக்கழகங்களுக்கு 50 இயந்திரங்கள் என அமைக்கலாம். 5 கிலோ கொண்ட துணிகளைத் துவைக்கச் சுமார் 25 ரூபாயும், அதிகபட்சமாக 20 கிலோ கொண்ட துணிகளுக்கு 100 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யலாம். இந்த இயந்திரங்கள் தானியங்கி முறையில் செயல்படும். இங்கே யுபிஐ (UPI) வழியாகச் செயல்படும் செயலிகளான ஜிபே (G pay), போன்பே (PhonePe) பேட்டிஎம் (Paytm) போன்றவற்றின் மூலம் கட்டணத்தைச் செலுத்தி, சேவையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அதற்கான க்யூஆர் கோடுகளைக் (QR Code) கண்ணில் படும்படி காட்சிப்படுத்த வேண்டும்.
திருச்சி மாவட்டம் அதிகக் கல்வி நிறுவனங்களைக் கொண்ட க்ளஸ்டட்ராக (Cluster) உள்ளது. சுமார் 1,50,000 மாணவர்கள் பல்வேறு வகையான கல்வியினைப் பெறுகின்றனர். இந்த டோக்கன் லாண்ட்ரி சேவை வழியே ஆயிரக்கணக்கானோர் பயனடைவதோடு, மாணவர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். இதன் வழியே ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் அளவுக்கு வருமான வாய்ப்பையும் பெறலாம். இந்தச் சேவையை திருச்சியில் தொடங்கி படிப்படியாகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தலாம்.
தியேட்டர்களுக்குச் செல்லும்போது அங்கே தலைக்கு மேலே கண்ணைக் கவரும் வடிவத்தில் வண்ண விளக்குகளை அமைத்திருப்பதை கவனித்திருக்கிறீர்களா… ஒருவேளை அதைக் காண தவறியிருந்தால், வணிக வளாகங்களிலோ, காபி ஷாப்களிலோ, நவீன உணவகங்களிலோ, நட்சத்திர விடுதிகளிலோ அதை நிச்சயம் நீங்கள் காணலாம். இப்போது வீடுகளில் உள் அலங்காரங்களிலும்கூட இத்தகைய அலங்கார விளக்குகளை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். பல்வேறு இடங்களில் இதன் பயன்பாடு அதிகரித்திருந்தாலும், இத்தகைய விளக்குகள் பெரும்பாலும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியே உருவாக்கப்படுவதால், அதனால் சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலும் மறைமுகமாக உள்ளது. இதற்கு மாறாக, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் வாழைநாரிலிருந்தும் நவீன அலங்கார விளக்குகளை உருவாக்கலாம்.
வாழைநார்கள் வலுவானவை மட்டுமல்ல, மக்கும் தன்மையும் கொண்டவை என்பதோடு அவற்றை மறுசுழற்சிக்கும் உட்படுத்தலாம். குறைந்த அடர்த்தியும் தேவையான விறைப்புத்தன்மையும் உள்ளதால் இதனைப் பயன்படுத்தி வாழைநார் அலங்கார விளக்குகளை வெவ்வேறு வடிவங்களில் பல்வேறு நிறங்களில், பல்வேறு அளவுகளில் தயாரிக்கலாம். சந்தையில் வாழைநார் அலங்கார விளக்குகளை அதிகபட்சமாக 1,000 ரூபாய் வரை வைத்து விற்கிறார்கள் என்பதால், இதற்கான மார்க்கெட் மதிப்பும் நன்றாக உள்ளது. இதையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திருச்சி மாவட்டத்தில் வாழைநார் அலங்கார விளக்குகளுக்கான தொழிற்சாலையை நிறுவி, ஆண்டொன்றுக்குப் பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமான வாய்ப்பைப் பெறலாம். திருச்சி மாவட்டத்தில் சுமார் 21,500 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(இன்னும் காண்போம்…)