பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. மாதம் ஒரு கோடி பெண்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்காக நடப்பு நிதி ஆண்டுக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் விதமாக ஆங்காங்கே முகாம்கள் நடைபெறுகின்றன. முதல் கட்டமாக 20,765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு ஜூலை 24 முதல் இன்று (ஆகஸ்ட் 4) வரை விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் இதில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாமும் நடைபெறுகிறது.
நேற்று மட்டும் 2,63,472 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்துமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேற்றுவரை முதற்கட்ட முகாமில் 79.66 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம்கள் நாளை (ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
தூத்துக்குடியில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” பதிவு முகாம்
சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் பயனாளர்களை கண்டறிந்து திட்டத்தை செயல்படுத்தும் வரை பல துறைகள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தலைமைச் செயலாளர், பிற துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், வட்டாட்சியர்கள் பிற அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமே மகளிர் உரிமைத் தொகை பணிகளிகுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள், அமைச்சர்களிடையே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
அதிகளவில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் தகுதிவாயந்த ஒருவர் கூட விடுபட்டுவிடக்கூடாது என்பதில் முதல்வர் எச்சரிக்கையாக இருக்கிறார், அதிகாரிகளிடத்திலும் இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திட்டம் தொடங்கப்படும் செப்டம்பர் 15ஆம் தேதியே ஒரு கோடி பயனாளிகளின் வங்கி கணக்கிலும் 1000 ரூபாய் செலுத்தினால் மட்டுமே விமர்சனங்களை தவிர்க்கலாம், எனவே விரைவாக விண்ணப்பங்களை சரிபார்த்து பதிவேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.