சென்னை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய சினிமா நகரம்

தென்னிந்தியத் திரையுலகத்தின் மையமாக சென்னை மாநகரம் ஒரு காலத்தில் விளங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டுமல்லாது பல ஹிந்தித் திரைப்படங்கள் கூட இங்குள்ள ஸ்டுடியோக்களில் உருவானது. ஏவிஎம், விஜயா வாஹினி, பிரசாத், ஜெமினி, கற்பகம், சத்யா, வீனஸ், பரணி, அருணாச்சலம் என பத்துக்கும் மேற்பட்ட ஸ்டுடியோக்கள் இருந்தன. அவற்றில் தற்போது ஏவிஎம், பிரசாத் ஆகிய ஸ்டுடியோக்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் கூட ஓரிரு அரங்குகள்தான் செயல்பாட்டில் உள்ளது.

தமிழக அரசு சார்பில் சென்னை, தரமணியில் பிலிம் இன்ஸ்டியூட் அருகில் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட்டது. 90களின் இறுதி வரை அங்கு பல படப்பிடிப்புகள் நடைபெற்றது. 2000ம் ஆண்டில் திறக்கப்பட்ட டைடல் பார்க் ஐ.டி.வளாகத்திற்காக திரைப்பட நகரத்தின் இடங்களை எடுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு அங்கு படப்பிடிப்புகளை நடத்த முடியவில்லை.

தற்போது சென்னையில் ஈவிபி, கோகுலம், ஆதித்யராம் என சில ஸ்டுடியோக்களில் தான் சினிமா, டிவி படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத் அருகில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில்தான் நடக்கிறது. ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அவர்களது படப்பிடிப்புகளை அங்குதான் அதிகம் நடத்துகிறார்கள்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் புதிய அதிநவீன திரைப்பட நகரம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள குத்தம்பாக்கம் என்ற கிராமத்தில் அமைப்பதற்குரிய ஆய்வுகளை முன்னாள் திரைப்படத் தயாரிப்பாளர், நடிகரும், இந்நாள் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில், “தென்னிந்தியத் திரைப்படத்துறையின் மையமாக விளங்கிய சென்னையில் நவீன சினிமாக்களுக்கான மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்தவும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பக் கலைஞர்களை உருவாக்கவும் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருந்தார்கள். கழக அரசின் இம்முத்திரைத் திட்டத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள குத்தம்பாக்கம் கிராமத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டு, சாத்தியக்கூறுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தோம்,” என தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்ப் படங்களே படமாக்கப்படுவது குறைந்துவிட்ட நிலையில் இந்த புதிய திரைப்பட நகரம் மூலம் மீண்டும் பழையபடி தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமா உலகத்தினரையும் இங்கு வரவைக்கும் அளவிற்கு அந்நகரம் உருவாக வேண்டும் என்பது தமிழ்த் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.