லண்டன்: கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் நெதர்லாந்து கடற்பகுதியில் தீப்பிடித்ததையடுத்து அதிலிருந்த 20 இந்திய பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது: பனாமாவுக்கு சொந்தமான’பெர்மான்டில் ஹைவே’ என்றசரக்கு கப்பல் ஜெர்மனியில் இருந்து 3,800 கார்களை ஏற்றிக்கொண்டு எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில், 498 மின்சார வாகனங்களும் அடக்கம். ஜூலை 25-ம் தேதியன்று நெதர்லாந்து கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த கப்பலின் மேல் தளத்தில் திடீரென தீப்பிடித்தது. அதிலிருந்து தப்பிக்க, பணியாளர்கள் சிலர் கடலில் குதித்தனர்.
இதில், இந்திய பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 20 இந்திய பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டனர். இறந்த இந்தியரின் உடலை கொண்டு வரும் பணியில் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பனாமா கப்பல் முழுவதும் இந்தியர்களால் இயக்கப்பட்டதாகும்.
கடினமான நேரத்தில் உடனிருந்து உதவியதுடன் தைரியமும் அளித்த நெதர்லாந்து அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீப்பிடித்தகப்பல் நெதர்லாந்தின் வடகிழக்கில் உள்ள துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 11 அடுக்குகள் கொண்ட கப்பலில் தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும், மின்சார வாகன பேட்டரி வெடித்து சிதறியது இந்த விபத்துக்கு காரணமாக இருக்காலம் என கப்பல் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.