‛ஷங்கர் 30' கொண்டாட்டம் : வாழ்த்திய மணிரத்னம் தலைமையிலான இயக்குனர்கள்
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். ‛ஜென்டில்மேன்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று முன்னணி இயக்குனராக இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராக வளர்ந்து நிற்கிறார். திரையுலகிற்கு இவர் வந்து 30 ஆண்டுகளாகிறது. சமீபத்தில் இதனை கேக் வெட்டி அவரது உதவி இயக்குனர்களுடன் கொண்டாடினார் ஷங்கர்.
இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தின் மற்றொரு நிகழ்வாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான மணிரத்னம், லோகேஷ் கனகராஜ், ஏஆர்.முருகதாஸ், லிங்குசாமி, கார்த்திக் சுப்பராஜ், சசி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் ஷங்கரை நேரில் சந்தித்து வாழ்த்தி, சின்ன பார்ட்டி உடன் கொண்டாடினர்.
இதுபற்றி ஷங்கர் வெளியிட்ட பதிவில், ‛‛இப்படி ஒரு சிறப்பான மாலை பொழுதை வழங்கிய இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி. பிரபல இயக்குனர்களை சந்தித்து அவர்களுடன் நினைவுகளை பகிர்ந்து கொண்டது, இளையராஜா, ஏஆர் ரஹ்மான் பாடல்களுக்கு வைப் செய்தது மறக்க முடியாத தருணங்கள். இவை நான் சம்பாதித்த உண்மையான சொத்து. சுஹாசினி உங்கள் உபசரிப்புக்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு மணிரத்னம் – சுஹாசினி இல்லத்தில் நடத்திருக்கலாம் என தெரிகிறது.