மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் ஆறு இந்தியர்கள் உட்பட, 40 பயணியருடன் சென்ற பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 18 பேர் பலியாகினர்; 22 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களின் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், மேற்கு மெக்சிகோவில் இருந்து ஆறு இந்தியர்கள் உட்பட 40 பயணியருடன் பஸ் ஒன்று, டிஜுவானா நகரை நோக்கி நேற்று முன் தினம் சென்றது. நயாரிட் மாகாண தலைநகர் டெபிக் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இருந்த 131 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்திற்கு பின், 18 பேரின் உடலை மீட்டனர். படுகாயங்களுடன் 22 பேரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்களின் அடையாளங்களை காணும் பணி நடந்து வரும் நிலையில், பஸ்சின் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பஸ்சில் பயணித்த இந்தியர்கள், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விபரமும் தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement