புதுடில்லி, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயரை சுருக்கமாக, ‘இந்தியா’ என பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, கூட்டணியில் உள்ள 26 அரசியல் கட்சிகள், மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷன் பதில் அளிக்க புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட, 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள ‘மெகா’ கூட்ட ணிக்கு, இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என, பெயரிடப்பட்டுள்ளது. இதை சுருக்கமாக ‘இந்தியா’ என அவர்கள் அழைக்கின்றனர்.
இது தொடர்பாக நாடு முழுதும் சர்ச்சை எழுந்தது. இந்தியா என்ற பெயரை, அரசியல் கட்சியின் கூட்டணிக்கு வைத்தது தவறு என, பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், கிரீஷ் பரத்வாஜ் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நாட்டின் பெயரை தங்கள் கூட்டணிக்கு வைத்து, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
எனவே, ‘இந்தியா’ என்ற பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என, அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், ‘எதிர்தரப்பினர் பதிலை பெறாமல் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது’ என, தெரிவித்தது.
இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, கூட்டணியில் இடம் பெற்றுள்ள 26 அரசியல் கட்சிகள் மற்றும் மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement