AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுதான் எதிர்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பம். மனித உழைப்பை எளிமைப்படுத்த உருவாக்கப்பட்டிருக்கும் இந்த AI உண்மையிலேயே மனிதர்களுக்குச் சவாலாகவும் உருவெடுத்து வருகிறது என்பதுதான் நிதர்சனம். AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அனைத்துத் துறைகளிலும் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய புதிய வரவு AI ஜோதிடம்.
தினமும் ராசிபலன் கேட்காமல் ஜோதிடப் பலன்கள் பார்க்காமல் பலருக்கும் பொழுது விடிவதில்லை. இதனால் திரைக்கலைஞர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே ஜோதிடர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிரபல ஜோதிடர்களுக்குப் போட்டியாக வந்திருக்கிறது இந்த AI ஜோதிடம்.
தற்போது https://kundligpt.com/ என்னும் இணைய தளம் AI தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்த இணைய தளத்தில் உங்கள் பிறந்த நேரம், பிறந்த நாள் மற்றும் பிறந்த இடம் பற்றிய தகவலைக் கொடுத்தால் AI உடனடியாக உங்கள் ஜாதகத்தைக் கணித்துவிடுகிறது. அதன்பின் உங்கள் எதிர்காலம் குறித்த எந்தக் கேள்வியையும் நீங்கள் முன்வைக்கலாம். AI அதற்கான பதிலைச் சொல்லும்.
இதுவரை இணையத்தில் ஜாதகம் கணித்துக்கொடுக்கவும் பொதுவான பலன்கள் சொல்லவும் மென்பொருள்கள் உள்ளன. ஆனால் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்லும் தொழில்நுட்பம் இல்லை. அதை AI மூலம் குண்டலி ஜிபிடி இணையதளம் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
தற்போது உலகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்து பலன் கேட்டு வருகிறார்கள். இதில் சோகம் என்னவென்றால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இணைய தளத்தைப் பார்வையிடுவதால் இணையதளத்தால் முறையாக சேவையை வழங்க முடியவில்லை. குறிப்பாக பிறந்த இடத்தைத் தேர்வு செய்யும் வரைபடக் கருவியை (Location Map) தொட்டால் அது தேவையற்ற புதிய பிரவுசர் விண்டோக்களை, பாப் அப்களைத் திறக்கிறது. அவற்றில் பல ஆட் பிளாக்கர் வகை விளம்பரங்களாகவும் நம்பகத் தன்மையற்ற தகவல்கள் தரும் இணையதளப் பக்கங்களாகவும் உள்ளன.
அப்படியே பிறந்த இடத்தைச் சரியாகக் குறிப்பிட்டுவிட்டாலும், “தற்போது அதிகமான ட்ராபிக் உள்ளது. காத்திருங்கள் அல்லது [email protected] என்னும் முகவரிக்கு hi என்று அனுப்புங்கள். கூட்டம் குறைந்ததும் தொடர்பு கொள்கிறோம் என்று தெரிவிக்கிறது.”
அந்த இமெயிலுக்கு hi அனுப்பியபிறகும் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும்போல் இருக்கிறது. சோதனைக்காக நேற்று காலையில் அனுப்பிய மெயிலுக்கு இதுவரை எந்தப் பதிலும் இல்லை. எனவே இந்த இணையதளத்தை அணுகுகிறவர்கள் இணையப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
இது தற்காலிகப் பிரச்னைதான். எதிர்காலத்தில் இதுபோன்ற பல இணையதளங்கள் உருவாகும்போது இத்தகைய பிரச்னைகள் தவிர்க்கப்பட்டுவிடலாம். ஆனாலும் AI ஜோதிட உலகில் கால் பதித்துவிட்டது என்பதுதான் உண்மை.
இதுகுறித்து பிரபல ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டபோது, “தொழில்நுட்ப வளர்ச்சியில் இதெல்லாம் சாதாரணம். ஒருகாலத்தில் பஞ்சாங்கம் பார்த்து ஜாதகங்கள் கணித்தோம். இன்று கம்பியூட்டரே ஜாதகம் கணித்துக் கொடுத்துவிடுகிறது. அதைப்பார்த்துப் பலன் சொல்கிறோம். எனவே AI தொழில்நுட்பத்தில் பதில்கள் பெறுவது அடுத்த கட்ட நகர்வு என்றுதான் பார்க்க வேண்டும். ஆனால் அது எந்த அளவுக்குத் துல்லியமாக இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காரணம் ஜோதிடத்தில் விதிகள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு விதிவிலக்குகளும் முக்கியம்.
ஜோதிடம் ஒரு கலை. இறை நம்பிக்கை சார்ந்தது. ஜோதிடர்கள் எவ்வளவு ஞானம் உடையவர்களாக இருந்தாலும் வாக்குப்பலிதம் வேண்டும். அது இல்லாமல் எதுவும் பலிக்காது. அந்த வாக்குப்பலிதம் இறையருளால் கிடைப்பது.
என்னிடம் வரும் பல வாடிக்கையாளர்கள் ஜாதகத்தைக் கொடுக்கும் முன்பாகவே எனக்குள் சில விஷயங்கள் என் உள்ளுணர்வின் மூலம் புரிந்துகொள்ளமுடியும். அதைச் சொல்லும்போது அவர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள். சொல்லும் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை பிறக்கும். வாக்குப் பலிக்கும். ஆனால் AI சொல்லும் ஜோதிடத்தில் இந்த உள்ளுணர்வு நிச்சயம் மிஸ் ஆகும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
ஆனாலும் சாதாரணமாக எதிர்காலம் குறித்துத் தெரிந்துகொள்ள இதுபோன்ற இணையதளங்களைப் பார்வையிடலாம். ஆனால் வாழ்க்கை குறித்த பெரிய பெரிய முடிவுகளை AI-ஐ கேட்டு எடுப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது” என்றார் ஜோதிடர் பாரதிஶ்ரீதர்.
இந்த AI ஜோதிடம் குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.