புதுச்சேரி : லோக்சபா,சட்டசபைக்கு தேர்தலை நடத்துவதற்கு வசதியாக மாற்றங்களை புதுச்சேரி தேர்தல் துறை செய்துள்ளது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் பச்சை கொடி காட்டியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேசிய அளவில் அரசியல் கட்சிகள் ஏற்கனவே துவங்கி விட்டன.
இந்நிலையில், புதுச்சேரி தேர்தல் துறையும் லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கையை துவங்கியுள்ளது. தேர்தல் அதிகாரிகளை பிற மாநிலங்களுக்கு அனுப்பி பயிற்சி பெற வைத்துள்ளது. மேலும், லோக்சபா, சட்டசபைக்கு தேர்தலை நடத்துவதற்கு வசதியாக நடைமுறையில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் பச்சை கொடி காட்டியுள்ளது.
என்ன மாற்றம்:
லோக்சபா தேர்தலை பொறுத்தவரை கலெக்டர் தேர்தல் அதிகாரியாக தொடர்கிறார். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்து வந்த கலெக்டரின் சிறப்பு பணி அதிகாரி நீக்கப்பட்டு, துணை மாவட்ட தேர்தல் அதிகாரி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 12 இ.ஆர்.ஓக்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சட்டசபை தேர்தலை பொறுத்தவரை சுற்றுலா, தொழில் துறை இயக்குநர்கள் கவனித்து வந்த சட்டசபை தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக உழவர்கரை நகராட்சி, புதுச்சேரி நகராட்சி ஆணையர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியாக உயர்த்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், சில சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி நகராட்சி ஆணையர் முத்தியால்பேட்டை, ராஜ்பவன் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், வடக்கு துணை கலெக்டர் அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தங்களுடன் கூடிய இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதற்கு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement