ஜெருசலேம்,
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல்அவிவ் நகரின் நஹல்ட் பியாமின் பகுதியில் உள்ள பிரபல வணிக வளாகம் அருகே போலீசார் நேற்று மாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்த போலீசார் சென்றனர். போலீசார் தன்னை நெருங்குவதை அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். பயங்கரவாதி நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென் அமீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சக போலீஸ் அதிகாரி, துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை சுட்டுக்கொன்றார்.
இஸ்ரேலிய போலீஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவை சேர்ந்த பயங்கரவாதி என தெரியவந்துள்ளது. தங்கள் அமைப்பை சேர்ந்த அபு அகமது (வயது 22) இந்த தாக்குதலை நடத்தியதாக பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.