ஆந்திர மாநிலம் கோனா சீமா மாவட்டத்தை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், ஒரு கிராமத்தை சேர்ந்த அரசின் கிராம தன்னார்வலர் ஒருவர், அங்காரா கிராமத்தை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் இவர்கள் மூவரும் ஆன்லைன் கேமான பப்ஜி மூலம் பேசத் தொடங்கி நண்பர்களாகியுள்ளனர். இந்த பழக்கத்தினால் அந்தப் பெண்ணுக்கும், கிராம தன்னார்வலருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
அதன் பின் இவர்களது வாழ்க்கை நல்ல முறையில் சென்று கொண்டிருந்துள்ளது. நரசிம்ம மூர்த்தியும் இவர்களுடன் எப்போதும்போல நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் ஒருநாள் அந்த இளம் பெண்ணை சந்தித்த நரசிம்ம மூர்த்தி அவரிடம் பாசமாகப் பேசி தன் அறைக்கு வருமாறு கூறியுள்ளார். அந்த இளம் பெண்ணும் தன் கணவரின் நண்பர்தானே என நம்பி, நேற்று முன்தினம் ஹைதராபாத் மல்லன்னகுட்டா ஜவகர் நகரில் உள்ள நரசிம்ம மூர்த்தியின் அறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது நரசிம்ம மூர்த்தி, ஏற்கெனவே மயக்க மருந்து கலந்து தயாராக வைத்திருந்த குளிர்பானத்தை அந்த இளம் பெண்ணிடம் கொடுத்துள்ளார். பெண், அதை குடித்ததும் சில நிமிடங்களில் மயங்கியுள்ளார். இதைப் பயன்படுத்தி நரசிம்ம மூர்த்தி அந்த பெண்ணை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்து, அவரை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். மயக்கம் தெளிந்து தன் நிலை அறிந்த பெண் நேராக வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவரை உறவினர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போதுதான் பெரும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. மூவரும் நண்பர்களாக இருந்தபோதே அந்தப் பெண் மீது நரசிம்ம மூர்த்திக்கு ஒருதலை காதல் இருந்துள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் காதலித்ததால் அமைதியாக இருந்துள்ளார் நரசிம்ம மூர்த்தி. அவர்களின் திருமணத்துக்குப் பிறகு, நீண்ட நாள்கள் சதித் திட்டம் தீட்டி, தற்போது அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நரசிம்ம மூர்த்தி தன் சொந்த ஊரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் நட்பு என்று வரும்போதும், இதுபோல் புது இடத்துக்குச் செல்லும்போதும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவுபடுத்தும் மற்றுமொரு சம்பவம் இது.