’பிங்க் ஐ’ தொற்று… 40,000 பேரை தாண்டிய கண் பிரச்சினை… கர்நாடகாவில் புதிய தலைவலி!

கண்களில் ஏற்படும் ஒருவிதமான பாதிப்பை ’பிங்க் ஐ’ என்று அழைக்கின்றனர். இது கண் இமைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள சவ்வு பகுதி வீக்கமடையும் போது ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் கண்களின் ஓரத்தில் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் தோன்றும். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக் கூடியது.

பிங்க் ஐ கண் தொற்று

இதை நம் ஊரில் ’மெட்ராஸ் ஐ’ என்று அழைப்பர். இது பெரும்பாலும் கோடைக் காலங்களில் தான் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் நீச்சல் குளங்களுக்கு அடிக்கடி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும். மேலும் மாம்பழ சீசன் வரும் போது ஈக்கள் மொய்ப்பதன் மூலமும் இந்த கண் தொற்று வரும் எனக் கூறுகின்றனர்.

கர்நாடகாவில் வேகமாக பரவல்

தற்போது பருவமழை வெளுத்து வாங்கி வரும் சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் கர்நாடகா மாநிலத்தில் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. இதை மருத்துவர்களே ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். ஒரே வாரத்தில் 40,477 பேருக்கு பிங்க் ஐ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு

இது ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான காலகட்டத்தில் பதிவாகியுள்ளது. இதை மாவட்ட வாரியாக பிரித்து பார்த்தால் பெங்களூரு அர்பன் 145 பேர், பெங்களூரு ரூரல் 192 பேர், பிடார் 7,693 பேர், ஹாவேரி 6,558 பேர், ராய்ச்சூர் 6,493 பேர், ஷிவமோகா 3,411 பேர், விஜயநகரா 2,200 பேர் என அடங்குவர்.

பரவும் வேகம் அதிகம்

பெங்களூருவில் பாதிப்புகள் குறைவாக இருப்பதாக தோன்றினாலும் பரவும் வேகம் அதிகம் என்கின்றனர். இதுபற்றி பெங்களூருவில் உள்ள மிண்டோ மருத்துவமனையில் இயக்குநரும், மருத்துவருமான சுஜாதா ரத்தோடு டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசுகையில், நோய்த்தொற்று போல பிங்க் ஐ பிரச்சினை அதிகரித்து வருகிறது.

என்ன காரணம்

எங்கள் மருத்துவமனையில் மட்டும் 400 பேருக்கு சிகிச்சை அளித்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் 30 பேரை பிங்க் ஐ தாக்கி விடுகிறது. எனவே மக்கள் மிகவும் எச்சரிக்கை உடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். கர்நாடகா மாநிலத்தில் பரவி வரும் பிங்க் ஐ பாதிப்பு குறித்து வல்லுநர்கள் கூறுகையில், வளிமண்டல மாற்றம், வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள், மழை ஆகியவை காரணமாக இந்த கண் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறுகின்றனர்.

புதிய வைரஸ்

இதில் மிகவும் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. பிங்க் ஐ பாதிப்பு என்பது முன்பெல்லாம் அடினோ வைரஸ் மூலம் ஏற்பட்டு வந்தது. தற்போது எண்டெரோ வைரஸ் மூலம் பரவி கொண்டிருக்கிறது.

அதாவது, வைரஸ் தோற்றுவிக்கும் பாதிப்புகளில் மாற்றம் வந்திருக்கிறது. இதுதொடர்பாக உரிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அரசு தரப்பு முகாம்கள் மூலம் மக்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.