ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் மேயராக இருப்பவர் முனேஷ் குர்ஜார். இவரது கணவர் சுஷில் குர்ஜார் நேற்று நிலம் ஒன்றின் குத்தகைக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிப் பிடிபட்டார். அவர்களது வீட்டில் லஞ்சப்பணத்தை வாங்கும்போது பிடிபட்டார். சுஷில் லஞ்சப் பணத்தை வாங்கும்போது மேயர் முனேஷ் குர்ஜாரும் வீட்டில்தான் இருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் வீட்டில் சோதனை நடத்தி ரூ.40 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
மேயருக்கும் இதில் தொடர்பு இருக்கும் என்று கருதி அவரை மாநில அரசு பதவியில் இருந்து நேற்று இரவு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு, அவர் கவுன்சிலர் பதவியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்கிய சுஷில் குர்ஜார் மற்றும் இதில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைதுசெய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நில குத்தகை ஒன்றின் ஒப்பந்தத்திற்கு விரைந்து அனுமதி கொடுக்க ஒருவர் விண்ணப்பித்திருந்தார்.
அந்த நபரிடம் சுனில் குர்ஜார் தனது உதவியாளர்கள் நாராயண் சிங், அனில் துபே மூலம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். உடனே நில குத்தகைக்கு விண்ணப்பித்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறையில் இது குறித்து புகார் செய்தார். அதன் அடிப்படையில் சுனில் குர்ஜாரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பொறிவைத்து பிடித்துள்ளனர். அதனை தொடர்ந்து நேற்று இரவு வரை மேயர் வீட்டில் சோதனை நடத்தி 40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
நாராயண் வீட்டில் 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சம் வாங்கியபோது மேயரும் இருந்ததால் அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகக் கருதி, வழக்கு விசாரணையில் தலையிடக்கூடும் என்பதால் முனேஷ் குர்ஜாரை மேயர் பதவியிலிருந்து அரசு நீக்கியிருக்கிறது.