1984-ல் நடந்த சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் ஜகதீஷ் டைட்லர் மீது சிபிஐ கொலை குற்றச்சாட்டு பதிவு

புதுடெல்லி: 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜகதீஷ் டைட்லர் மீது கொலை குற்றச்சாட்டை சிபிஐ பதிவு செய்துள்ளது.

கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை, அவரது பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். அதன்பின் டெல்லி உட்பட பல நகரங்களில் சீக்கியர்களுக்கு எதிராக பெரிய அளவில் கலவரம் நடந்தது. அப்போது 1984-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பாதல் சிங், தாக்குர் சிங், குர்சரண் சிங் என்ற 3 சீக்கியர்கள் டெல்லியில் உள்ள புல் பங்காஷ் பகுதியில் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜகதீஷ் டைட்லர் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ கடந்த 2010-ம் ஆண்டு தெரிவித்தது. இருப்பினும், 2013-ம் ஆண்டு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜகதீஷ் டைட்லர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், ‘‘புல் பங்காஷ் பகுதியில் குருத்வாரா ஆசாத் மார்க்கெட் பகுதியில் கும்பலை கூட்டி சீக்கியர்களுக்கு எதிராக ஜகதீஷ் டைட்லர் கலவரத்தைத் தூண்டியுள்ளார். அந்த குருத்வாரா தீயிட்டு எரிக்கப்பட்டது. அதில் தாக்குர் சிங் உட்பட 3 சீக்கியர்கள் உயிரிழந்தனர்’’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் ஜெகதீஷ் டைட்லர் மீது சிபிஐ கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. மேலும் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், ஜகதீஷ் டைட்லர் கலவரத்தைத் தூண்டியதை ஒரு பெண் நேரடியாகப் பார்த்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

அந்த குற்றப்பத்திரிகையில் சிபிஐ மேலும் கூறியுள்ளதாவது: கலவரத்தின்போது அந்தப் பெண்ணின் கணவருக்குச் சொந்தமான கடையை, ஒரு கும்பல் சூறையாடியுள்ளது. அந்தப் பெண் அந்த வழியாக வந்தபோது ஒரு அம்பாசிடர் காரிலிருந்து ஜகதீஷ் டைட்லர் இறங்குவதைபார்த்துள்ளார். பின்னர் ஒரு கும்பலிடம் சென்ற டைட்லர், சீக்கியர்களை முதலில் கொல்லுங்கள் என்றும் பின்னர் கடைகளைச் சூறையாடுங்கள் என்றும் தூண்டிவிட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்ததும் அந்த பெண் பயந்துபோய் வீட்டுக்கு திரும்பியுள்ளார். குருத்வாராவை, வன்முறை கும்பல் தீயிட்டு எரிப்பதையும் அந்தப் பெண் தனது கண்களால் நேரடியாகப் பார்த்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.