வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த மாதம் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி எடுத்தது. இந்நிலையில், அமெரிக்காவில் 35 வயது பெண் 20 நிமிடங்களில் 2 லிட்டரை குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர்:
இது குறித்து, உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் டெவன் மில்லர் கூறியதாவது: தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் 20 நிமிடத்தில் நான்கு பாட்டில் தண்ணீர் குடித்துள்ளார். 20 நிமிடத்தில் சுமார் 2 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவருக்குச் சுயநினைவு திரும்பவில்லை. அதன் பின்னரே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு நிலைமை மோசமானது. பின்னர் அவர் உயிரிழந்தார். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து டாக்டர் பிளேக் ப்ரோபெர்க் கூறியதாவது:
இது போன்ற சம்பவங்கள் கோடைக் காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனென்றால் அப்போது தான் வெயில் காரணமாக திடீரென அதிகமான நீரை எடுத்துக் கொள்வார்கள். உடலில் அதிக தண்ணீர் சத்து இருந்தும். போதுமான சோடியம் இல்லாமல் போனால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
அறிகுறிகள் என்ன?
தண்ணீர் அதிகமாக குடித்தால், பொதுவாகத் தசைப்பிடிப்பு, வலி, குமட்டல் மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படும். இதுதான் முக்கிய அறிகுறிகள். நாம் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். தகுந்த சிகிச்சை இல்லையென்றால் உயிரிழப்பு கூட நேரிடலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement