பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் சித்துார் -தத்தமங்கலம் அருகேயுள்ள கிராமம் வால்முட்டி. இங்குள்ள, 65 வீடுகளிலும் பாடகர் மற்றும் ஏதாவது இசைக்கலைகளில் திறமை வாய்ந்தவர்கள் உள்ளனர். இதனால், ‘பாட்டு கிராமம்’ என்று இந்த கிராமத்தை -தத்தமங்கலம் நகராட்சி அறிவித்துள்ளது.
கேரள பாரம்பரிய கலையான கதகளி நடன சங்கீதத்தில், ‘பெலோஷிப்’ வென்று பல வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் கலைஞர் சதனம் சாய்குமார் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து வயது மகிமா முதல், 70 வயது தத்தம்மா வரை, ஸ்ருதி சுத்தமாக பாடுகின்றனர். பாரம்பரிய இசை, கதகளி இசை, அஷ்ட்டபதி முதல் புதிய திரைப்படப் பாடல்கள் வரை இவர்கள் சரளமாக பாடுகின்றனர்.
இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த நிதீஷ் கூறியதாவது: ‘பாட்டு கிராம்’என்ற அறிவிப்பின் நோக்கம், பாடகர்கள், கலைத்திறன் உள்ளவர்களை ஊக்குவிப்பதாகும். பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் இப்பகுதி மக்கள், பாடலை வாழ்க்கையின் ஒரு பகுதியாக்கி கொண்டவர்கள்.
கேரள மாநில, பாரம் பரிய கலையான ‘பொரட்டு நாடக’ இசை கலைஞர் ராமன் ஆசான் வால்முட்டியை சேர்ந்தவர்.
பிரசித்தி பெற்ற கொடுங்கல்லுார் பகவதி அம்மன் குறித்து எழுதிய, ‘நல்லம்மா’ பாடலை வடிவமைத்த கோமுத்தனும் இப்பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தையும் சகோதரனும் சிறந்த ‘நல்லம்மா’ பாடகர்கள்.
இவர்களின், புது தலைமுறையினர் கல்லுாரியில் படிக்கின்றனர். கல்லுாரி கலை நிகழ்ச்சிகளில் பரிசுகள் எக்கச்சக்கமாக பெற்றுள்ளனர். அரசின் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, பாடல், இசைநிகழ்ச்சி நடத்தி இப்பகுதி மக்கள் மனதை ஈர்த்து வருகின்றனர்.
பலர் இசை குழுவில் பாடகர்கள். சங்கீத ஆசிரியர்களான மோகனன், சுலதா, உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் நுாற்றுக்கு மேலான மாணவர்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்கின்றனர்.
கடந்த, 2017ல் மோகனன், 2019ல் தெய்வானை, 2022ல் தத்தமமா ஆகியோர் வாயிலாக கேரள அரசின் மூன்று நாட்டுப்புற அகாடமி விருதுகள் இந்த கிராமத்துக்கு கிடைத்துள்ளன. அரசின் வைர விழா ‘பெலோஷிப்’ தீபா கிருஷ்ணகுமாருக்கு கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்