இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிட உள்ளது. முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட eVX கான்செப்ட் அடிப்படையில் தயாரித்து வருகின்றது.
முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை தொடர்ந்து 2030 ஆம் ஆண்டுக்குள் 6 பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தனது மாருதி சுசூகி 3.0 செயல்திட்ட அறிக்கை பற்றி வருடாந்திர கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், 2030-2031 ஆம் நிதி வருடத்துக்குள் ஆண்டுக்கு 40 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
Maruti Suzuki Electric SUV
சமீபத்தில் ஐரோப்பா நாடுகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் மாருதி சுசூகி இவிஎக்ஸ் கான்செப்ட் 2023 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதிய eVX எஸ்யூவி காரில் 60kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சுமார் 550 கிமீ தொலைவு பயணிக்கும் ரேஞ்சு கொண்டிருக்கும் என்று மாருதி அறிவித்துள்ளது. இரண்டாவவதாக குறைந்த 48kWh பேட்டரி அதிகபட்சமாக 400 கிமீ வரம்பினை வழங்கலாம்.
eVX எஸ்யூவி 4,300 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம் மற்றும் 1,600 மிமீ உயரம் கொண்டதாக இருக்கும் என்று மாருதி குறிப்பிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட தற்போது இந்திய சந்தையில் வரவிருக்கும் கிரெட்டா இவி, சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் இவி போன்ற நடுத்தர எஸ்யூவி கார்களுக்கு இணையான போட்டியாளராக விளங்கும்.
Maruti Suzuki 3.0
ஆண்டுக்கு 20,000 கார்கள் என்ற உற்பத்தி இலக்குடன் துவங்கிய மாருதி சுசூகி நிறுவனம் தற்பொழுது ஆண்டுக்கு 22 லட்சத்துக்கும் கூடுதலான கார்களை தயாரித்து வருகின்றது. அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த உற்பத்தியை 4 மில்லியன் அதாவது ஆண்டுக்கு 40 லட்சம் ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
புதிதாக மாருதி சுசூகி 3.0 திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள ஹரியானா அருகில் உள்ள கஹர்ஹோடா ஆலையில் ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது போல மற்றொரு ஆண்டுக்கு 10 இலட்சம் இலக்குடன் ஆலையை துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
8 ஆண்டு வணிகத் திட்டத்தின் முடிவில் ஆண்டுக்கு 40 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி செய்யும் நோக்குடன், இந்நிறுவனம் அதன் ஆண்டறிக்கையில் சுமார் 15% அல்லது 6 லட்சம் எண்ணிக்கையில் பேட்டரி மின்சார வாகனங்களாக இருக்கும் என்றும், சுமார் 25 % அல்லது 10 லட்சம் எண்ணிக்கை ஹைபிரிட் வாகனங்களாகவும், மீதமுள்ள 60 % IC என்ஜின் மாடல்கள் சிஎன்ஜி, எத்தனால், உயிர் வாயு (Bio-gas) போன்றவை ஆக இருக்கும்.
4 மில்லியன் யூனிட் உற்பத்தித் திட்டத்தில் – 3.2 மில்லியன் யூனிட்கள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படலாம்.