நியூடெல்லி: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் தேதிகளில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் தேதியை நவம்பர் 12 முதல் 11 ஆம் தேதிக்கு மாற்றுமாறு வங்காள கிரிக்கெட் சங்கம் (Cricket Association of Bengal (CAB)) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (Board of Control for Cricket in India (BCCI)) கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியை நவம்பர் 12க்கு பதிலாக அதற்கு முதல் நாளான நவம்பர்11க்கு மாற்றுமாறு கோரியுள்ளது. அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி போட்டியின் தொடக்க ஆட்டமும், நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.
இதேபோல, ஐசிசி உலகக் கோப்பை 2023ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்படும். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுவதில் எந்த மாற்றமும் இல்லை.
நகர காவல்துறை அதிகாரிகளை, CAB அதிகாரிகள் சந்தித்த பிறகு BCCI செயலாளர் ஜெய் ஷாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போட்டி நாளில் சாத்தியமான பாதுகாப்பு நிலவரம் குறித்து CAB அதிகாரிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 12ம் தேதியன்று, காளிபூஜை அனுசரிக்கப்படுவதால் இந்த மாற்றத்திற்கான கோரிக்கை எழுந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில், நவராத்திரியில் காளிபூஜை மிகவும் விசேஷமான ஒன்று, அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படும் நிலையில், கிரிக்கெட் போட்டியின் நாள் மாற்றியமைக்கப்பட்டால், நகர நிர்வாகத்தினருக்கு சிக்கல் இருக்காது.
முன்னதாக, மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கான தேதியை மாற்றுமாறு அகமதாபாத் காவல்துறையும் கோரிக்கை விடுத்தது. ஒன்பது நாள் இந்து பண்டிகையான நவராத்திரியின் தொடக்கத்துடன் இந்தோ-பாகிஸ்தான் விளையாட்டிற்கான அசல் தேதி அக்டோபர் 15-ம் தேதி மோதியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் அட்டவணையில் மாற்றங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒப்புக் கொண்டுள்ளது.
அசல் உலகக் கோப்பை அட்டவணைப்படி, கொல்கத்தா ஐந்து போட்டிகளை நடத்துகிறது, அவை: வங்கதேசம் vs நெதர்லாந்து, அக்டோபர் 31-ம் தேதி வங்கதேசம் vs பாகிஸ்தான், நவம்பர் 5-ம் தேதி இந்தியா vs தென்னாப்பிரிக்கா, நவம்பர் 12-ம் தேதி இங்கிலாந்து vs பாகிஸ்தான், மற்றும் இரண்டாவது அரை- இறுதிப் போட்டி நவம்பர் 16ஆம் தேதி. முதல் அரையிறுதி நவம்பர் 15ஆம் தேதி மும்பையிலும், இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெறும்.
ODI உலகக் கோப்பை 2023, அட்டவணையின்படி, அக்டோபர் 5 முதல் அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. நான்காண்டு போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.