அடுத்த வருடம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் வருடத்திற்கு ஒரு தவனைப் பரீட்சை மாத்திரமே நடைபெறும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்தில் பாடசாலையில் உள்ள மூன்று தவணைகளுக்கும் சேர்த்து பொதுவாக ஒரு பாடத்திற்கு ஒரு பாட புத்தகம் வழங்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி ஒவ்வொரு தவணைக்கும் தனித்தனியாக ஒரு புத்தகம் வீதம், வருடத்துக்கு மூன்று புத்தகங்கள் ஒரு பாடத்திற்காக வழங்கப்படும் நடைமுறையை கொண்டு வர உள்ளோம். இதன் மூலம் மாணவர்களின் புத்தகப்பையின் சுமையை குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக பெற்றோர்கள், தமது குழந்தைகளின் தனியார் வகுப்புகளுக்காக அநாவசியமாக அதிக பணத்தை செலவிடுகின்றனர். இதனால் மாணவர்களின் உடல் நலனை பாதுகாப்பதற்கு தேவையான நல்ல போஷாக்குள்ள உணவுகளை வழங்குவதற்கான பணத்தை ஒதுக்க அவர்களால் ஒதுக்க முடியாதுள்ளது.
இந்த நிலைமையை மாற்றுவதற்கு அடுத்த வருடம் (2024) முதல், முதலாம் ஆண்டுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும்; தவணைக்கு ஒரு பரீட்சை என பரீட்சைகளை நடத்தாமல், ஒரு வருடத்திற்கு பொதுவாக வருட இறுதியில் ஒரு பரீட்சையை மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் ஒவ்வொரு பாடத்தின் கணிப்பீட்டு ரீதியான மதிப்பெண்கள் அனைத்தும் கணநியில் தரவுகளாக பதிவு செய்யப்பட்டு அவை ஆண்டு இறுதியில் இறுதி பரிட்சை மதிப்பெண்களுடன் இணைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.