அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கரும், அவரது மனைவியும் சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 2013 முதல் 2021 வரை சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியவர் சி.விஜயபாஸ்கர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக முன்னாள் அமைச்ச்சர்கள் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வந்தனர். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இடங்களில் சோதனை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
சி.விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்த 2021ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திமுகவை சேர்ந்த 15 நபர்கள் கரூர் முதல் அமர்வு நீதிமன்றம் முன்பு ஆஜர்
2016 – 21 காலகட்டத்தில் இருவரும் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 35.79 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கின் விசாரணைக்காக வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி சி.விஜயபாஸ்கரும், ரம்யாவும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.