சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு வந்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க தொடங்குவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் காவலுக்கு செல்வதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் ரெய்டு நடத்திய போலீஸார், கடந்த ஜூன் மாதம் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரிப்பதற்காக அழைத்து சென்ற போது தனது நெஞ்சு வலிப்பதாக கூறி கதறினார் செந்தில் பாலாஜி. இதனைத் தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பைபால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, அறுவை சிகிச்சை முடிந்து பூரணமாக குணம் அடைந்ததால் காவேரி மருத்துவமனையில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களே ஆகியிருப்பதால் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. இதனால் புழல் சிறை மருத்துவமனையிலேயே அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி அமலாக்கத்துறை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, புழல் சிறைக்கு இன்று இரவு 7 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்றனர்.
அங்கு அவரை காவலில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த நடைமுறைகள் எல்லாம் முடிந்த பிறகு, செந்தில் பாலாஜிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறும். இதையடுத்து, அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து அழைத்து செல்வார்கள். சென்னை அல்லது கும்மிடிப்பூண்டியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவர் அழைத்து செல்லப்படுவார் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.