நியூயார்க் : அமெரிக்காவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, பட்டினியால் தவிக்கும் ஹைதராபாத் மாணவியை, இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை, அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.
தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்தவர் சைதா லுாலு மின்ஹாஜ் சைதி. இவர் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் உள்ள டிரைன் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்., உயர் கல்வி படிப்பதற்காக, 2021ல் சென்றார்.
கடந்த இரண்டு மாதங்களாக ஹைதராபாதில் உள்ள குடும்பத்தினரை, அந்த மாணவி தொடர்பு கொள்ளவில்லை. உடைமைகள் திருடு போனதை அடுத்து, கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சைதா, உணவு அருந்தக்கூட வழியின்றி சிகாகோ நகர சாலைகளில் சுற்றி திரிவதாக ஹைதராபாதில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு சமீபத்தில் தெரியவந்தது.
அவரை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு மாணவியின் குடும்பத்தினர், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, சைதா குறித்த விபரங்களை உள்ளூர் போலீஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக கண்டறிந்த சிகாகோவில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள சமூக சேவகர் முக்காராம் உதவியுடன் சைதா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விபரமும் தெரியவந்தது.
இதையடுத்து, சைதாவை இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கையை நம் நாட்டு துாதரக அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:
சைதாவை தொடர்பு கொண்டு, மருத்துவ உதவி மற்றும் இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த உதவிகளை வழங்கினோம். அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். தன் தாயுடனும் அவர் பேசினார். இந்தியாவுக்கு திரும்புவது குறித்து அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. அவருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement