இந்திய ராணுவத்தில் பறக்க போகுது நடிகர் அஜித் அணி தயாரிக்கும் ட்ரோன்கள் : ரூ.165 கோடிக்கு ஆர்டர்

சென்னை : நடிகர் அஜித் வழிகாட்டுதல் உடன் செயல்பட்டு வரும் தக்ஷா குழு, இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் தயாரிக்கும் ஆர்டரை ரூ.165 கோடிக்கு பெற்றுள்ளது.

நடிகர் அஜித் சினிமாவை தாண்டி பைக், கார் ரேஸ், போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல் மற்றும் ட்ரோன் தயாரிப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். ஏற்கனவே சிறிய ரக ட்ரோன்களை தயாரித்து அசத்தி உள்ளார். இவரது திறமையை கண்டு சென்னை எம்ஐடி-யைச் சேர்ந்த மாணவர்கள் குழு இவர் ஆலோசனை வழங்க தக்ஷா என்ற பெயரில் குழுவாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ட்ரோன்கள் தயாரிக்கும் பணிகளில் இவர்கள் இறங்கினர். கொரோனா காலக்கட்டத்தில் இவர்கள் உருவாக்கிய ட்ரோன்கள் பல திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் இந்த குழுவினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. இந்திய ராணுவத்திற்காக இவர்கள் 200 ட்ரோன்களை தயாரிக்க ஆர்டர் பெற்றுள்ளனர். இதற்காக ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இவர்கள் தயாரிக்கும் ட்ரோன்களை இந்திய ராணுவத்திற்காக வழங்க உள்ளனர். இந்த ட்ரோன்கள் எல்லை பகுதிகளில் கண்காணிப்பு உள்ளிட்ட பல வகைகளில் பயன்படுத்தப்பட உள்ளன.

அஜித் மற்றும் அவர் ஆலோசனை வழங்கும் இந்த குழுவிற்கு இந்திய ராணுவத்திடமிருந்து ஆர்டர் கிடைத்திருப்பது மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. அதோடு அஜித் மற்றும் அவர் சார்ந்த தக்ஷா குழுவினருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.