கடந்த 5 வருடத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள வருடாந்த வட்டி இலாபத்தைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் 4 வருடங்களுக்குள் பங்களிப்பு நிதி (சந்தாப் பணம்) மூலம் கிடைக்கும் வருடாந்த வட்டி வீதம் குறைந்தபட்சம் 9 வீதமாக இருக்க வேண்டும் என்று 1985 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் திருத்தப்படும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அதற்காக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
அத்துடன், கடன் மறுசீரமைப்பு நடைமுறையினூடாக அரசாங்கம், ஓழியர் சேமலாப நிதியை சுரண்டுவதாக கடந்த காலத்தில் பாரிய அரசியல் கருத்தொன்று எழுந்தது. இந்தச் சட்டத் திருத்தத்தின் பின்னர், ஊழியர் சேமலாப நிதி சுரண்டப்பட்டதாகவும், கிடைக்க வேண்டிய பயன்கள் குறைக்கப்பட்டன என்றும் எவரும் குற்றம் சுமத்த முடியாது.
இதன்படி, எதிர்வரும் 04 வருடங்களில் எந்த அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்தாலும், இச்சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, அதன் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள்; அந்த 9 வீத வருடாந்த வட்டியினூடாக கிடைக்கப்பெறும் என்றும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.