கேரள மாநில சட்டப்பேரவையில் 9வது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், பொது சிவில் சட்ட தீர்மானத்தில் இருந்து மத்திய அரசு பின்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று கேரள சட்டப்பேரவையில் அம்மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை காங்கிரஸ் தலைமையிலான UDF எதிர்கட்சிகள் ஏற்றுக்கொண்டன.
இந்த தீர்மானத்தில் எந்த திருத்தங்களையும் மாற்றங்களையும் பரிந்துரை செய்யவில்லை. இதையடுத்த்து சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் கைக்கூப்பியதன் அடிப்படையில் கேரள பெயர் மாற்ற தீர்மானம் சட்டப்பேரவையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தீர்மானத்தை தாக்கல் செய்த முதல்வர் பினராயி விஜயன், மலையாளத்தில் ‘கேரளம்’ என்று அழைக்கப்படும் மாநிலம், பிற மொழிகளில் கேரளாவாகவே உள்ளது என்றார். மேலும் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகத்தினருக்காக ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக உள்ளது என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.