திருவண்ணாமலைக்கு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் போது திருவண்ணாமலை ஊரே திரும்பும் திசையெங்கும் மனிதத் தலைகளால் நிறைந்து இருக்கும்.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், புதுச்சேரி மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருவண்ணாமலைக்கு போதிய ரயில் சேவை இல்லாதது மக்களை சிரமத்தில் ஆழ்த்துகிறது.
16 ஆண்டுகளுக்கு முன்னர் தாம்பரம் – திருவண்ணாமலை ரூட்டில் இயங்கி வந்த ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்படவே இல்லை.
விழுப்புரம் – காட்பாடி இடையே அப்போது இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இந்த பணிக்காக தாம்பரம் – திருவண்ணாமலை ரயில் சேவையை 2007 மே 31ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தினர்.
தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி ஆய்வு
ஆனால் அகல ரயில் பாதைப் பணிகள் நிறைவு பெற்று விழுப்புரம் – காட்பாடி இடையே கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் 16 ஆண்டுகள் ஆகியும் தாம்பரம் – திருவண்ணாமலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படாதது சென்னை, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் இந்த ரயில் சேவையை கொண்டு வர வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் பல்வேறு சமயங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதில் எதிலும் பயனில்லாமல் போனது. எனவே தெற்கு ரயில்வேயும், இந்திய ரயில்வேயும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்பதே இதன் சுற்றுவட்டார மாவட்டங்களின் கோரிக்கையாக உள்ளது.