மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர், அவர் பணி செய்த கம்பெனியில் ஒப்பந்தம் முடிந்ததால் வேலை தேடுவதற்கான இரண்டு இணையதளத்தில் பயோடேட்டாவை பதிவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, சில நாள்களில் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து செய்தி வந்திருக்கிறது. அதில், பல்வேறு பாலிவுட் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்களுக்கு லைக் மற்றும் கமென்ட் போட வேண்டும் என்பதுதான் பணி எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/158770_thumb.jpg)
மேலும், இதன் மூலம் அவர் ஒரு நாளைக்கு ரூ 2,000 முதல் ரூ 3,000 வரை சம்பாதிக்க முடியும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. அவரும் முதலீடற்ற பணி என்பதால் ஒப்புக்கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட நபருக்கு நம்பிக்கை வரவைக்கும் வகையில், அவர் செய்த வேலையின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிரும்படி கேட்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில தினங்களில் அவர் டெலிகிராமில் உள்ள ஒரு குழுவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சில கிரிப்டோ கரன்சி பணிகள் ஒதுக்கப்பட்டன.
இந்தப் பணியில் சேர்வதற்கு அவர் கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின்களை வாங்கக் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும்படி கூறப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் கொடுத்த லிங்க் மூலம் அவர் இணையதளத்திற்குள் நுழைந்திருக்கிறார். மேலும், ஆரம்பத்தில் சுமார் ரூ 9,000 முதலீடு செய்தார், அதற்குப் பதிலாக ஒரு நாளுக்கு ரூ,980 லாபம் கொடுத்து ரூ.9,980 திரும்பப் பெற்றிருக்கிறார். வேலை லாபகரமானது என்றும், அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் அவரை நம்ப வைத்திருக்கின்றனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/shutterstock_1434643079.jpg)
அதனால், அவர் மீண்டும் ரூ.30,000 செலுத்தி ரூ.8,208 லாபம் அடைந்திருக்கிறார். ரூ.30,000 முதலீடு செய்ததால் அவர் டெலிகிராம் செயலியில் ‘விஐபி’ குழுவில் இணைக்கப்பட்டார். இதன் பொருள் அவர் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டார். மேலும், அவர் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெற, அதிகப் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
இப்படியாக அவர் கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் ரூ.37.03 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார். ஆனால் அவருக்கான லாபமோ, அல்லது அவரின் முதலீடோ திரும்பக் கிடைக்கவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, காவல்துறையில் புகார் பதிவு செய்திருக்கிறார். தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.