`மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் `மாவீரன்’.
குடிசை மாற்று வாரியத்தில் நடக்கும் எளிய மக்களுக்கு எதிரான அரசியல் மற்றும் தரமற்ற, நிலமற்ற அடுக்குமாடி வீடுகளால் பாதிப்படையும் மக்களின் வாழ்வை வித்தியாசமான கமர்ஷியல் ஜானரில் சொன்ன இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றது. சிவகார்த்திகேயனின் அசத்தலான நடிப்பு, விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர், யோகி பாபுவின் அசால்ட்டான காமெடிகள், மிஷ்கினின் வில்லனிஸம் எனப் படம் முழுக்கப் பாராட்டைப் பெற்றது. ரசிகர்கள், சினிமா வட்டாரங்கள் எனப் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் `ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருந்த ரஜினி தற்போது `மாவீரன்’ படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனைப் பாராட்டியுள்ளார்.
இதுபற்றி தனது சமூக வலைதளபக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், “‘மாவீரன்’ திரைப்படம் 25வது நாளை நிறைவு செய்து நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றியைக் கொடுத்த பத்திரிகையாளர்கள், எல்லா மாநிலத்திலிருக்கும் பார்வையாளர்கள் மற்றும் என்னுடைய ரசிகர்களான சகோதர – சகோதரிகள் எல்லோருக்கும் நன்றி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், ‘மாவீரன்’ படம் பார்த்துட்டு எனக்கு கால் பண்ணி வாழ்த்து சொன்னாங்க. இது எனக்கும் படக்குழுவினருக்கும் ரொம்ப ஸ்பெஷலான வாழ்த்து. ரஜினி சார் ‘ஜெயிலர்’ படம், இசை வெளியீடு, ரிலீஸ் என பிஸியாக இருந்ததால் அவரால் ‘மாவீரன்’ படத்தைப் பார்க்க முடியாது என்று நினைத்தேன்.
ஆனால், ரஜினி சார் படத்தைப் பார்த்துவிட்டு எனக்கு கால் பண்ணி, ‘படத்தை முழுமையாக ரசிச்சேன். படம் ரொம்ப கிராண்டா இருந்துச்சு. ரொம்ப சூப்பரா நடிச்சிருந்திங்க, வித்தியாச வித்தியாசமான கதைகளா புடிக்கிறிங்க!’ என்றார். இவ்வளவு பிஸியாக இருந்தபோதும் அவர் எங்களுக்கு வாழ்த்துக் கூறியது பெரிய விஷயம். தலைவா யூ ஆர் ஆல்வேஸ் கிரேட். நான் எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரின் ரசிகன்தான். அவர் ஒவ்வொரு முறை எனக்கு வாழ்த்துச் சொல்லும்போதும் எனக்கு அது ரொம்ப ஸ்பெஷலான மொமன்ட்தான்.
நாளைக்கு ‘ஜெயிலர்’ ரிலீஸ் நாள். ‘ஜெயிலர்’ மிகப்பெரிய வெற்றி பெறும். தலைவா… உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.