`இணையம் இலவசம்’ – கேரளாவில் தொலைதொடர்பு பொதுத்துறை நிறுவனம்… தமிழகத்திலும் சாத்தியமா?!

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேரள மாநிலத்துக்கு அரசு பயணமாக சென்றுள்ளார். அங்கு, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்(TANFINET) வாயிலாக அதிவேக இணைய வசதி மேற்கொள்வது பற்றி கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (KFON) நிறுவனத்திடம் கேட்டறிந்தார். ’கேஃபோன்’ என்னும் நிறுவனத்தின் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில்  இணைய சேவை வழங்க கேரள அரசு திட்டமிட்டிருக்கிறது. இது பற்றி தெரிந்துகொள்வதற்கே தமிழக அமைச்சர் பயணம் மேற்கொண்டார்.

கேரளா – இணையம் சேவை

கேஃபோன் உருவான கதை:     

உலகமயமாக்கலுக்குப் பின் இணைய சேவை பயன்பாடு அதிகரித்துள்ளது. இணைய பரவல் எங்கு சிறப்பாகயிருக்கிறதோ, அவர்களால் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு என அனைத்திலும் வளர்ச்சி அடைய முடியும் என்னும் நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக, கொரோனா காலகட்டத்துக்குப் பின் இந்தக் கருத்து மேலும் வலுப்பெற்றது. ஆனால், இந்த வசதி அனைவருக்கும் சென்று சேர்கிறதா என்னும் கேள்வி முன்வைக்கப்பட்டது.

மத்திய பாஜக அரசு, அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ஐ ஒழித்துகட்டி, தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் வளர்க்க முயற்சி செய்கிறது என்பது ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இதனால், மக்கள் அதிக விலைக்கு தனியார் இணைய சேவையைப் பெற வேண்டியிருக்கிறது. விளைவாக, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே இணைய சேவை என நிலை மாறிவிட்டது. இதனால், கிராமம் மற்றும் மலை பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக பாதிப்பைச் சந்திக்கின்றனர். உலகம் டிஜிட்டல் தளத்தை நோக்கிப் பயணிக்கும் வேளையில் இந்த ’இணைய ஏற்றதாழ்வு’ நாளடைவில் ’பொருளாதார ஏற்றத்தாழ்வாக’ உருமாறிவிட்டது.

இந்தியாவில் 50 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே இணைய சேவையைப் பெறுகின்றனர். பழங்குடியின மக்களுக்கு 30 சதவிகிதம் குறைவாகவே இணைய வசதிகள் கிடைக்கிறது. ’டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு’ மிகவும் ஆழமாக வேரூன்றிய வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.

இணையம்

இந்த நிலையில்தான் கேரள மாநிலம் ‘கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்,(KFON) என்னும் தொலைதொடர்பு பொதுத்துறையை அறிமுகம் செய்துள்ளது. மாநிலத்துக்கென தனி தொலைதொடர்பு வசதியைக் கொண்டுவரும் முதல் மாநிலம் கேரளாதான். இதைப் பயன்படுத்தி அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குப் பிராட்பேண்ட் இணைய வசதிகளை அரசே வழங்கமுடியும். இதன் முதல்கட்டமாக, மாநிலத்தில் 30,000 கி.மீ அளவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 20 லட்சம் குடும்பங்களுக்கு அதிவேக இணைய வசதி இலவசமாகவும் மற்றவர்களுக்கு குறைவான விலையிலும் கொடுக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் 30,000 அரசு நிறுவனங்களுக்கு இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 17,412 அரசு நிறுவனங்களில் கேஃபோன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 9,000-க்கும் அதிகமான வீடுகளுக்கு இணைப்பு வழங்க கம்பிகளும் இணைக்கப்பட்டுள்ளன. 2,105 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது மேலும் விரிவடையும்.

எப்படி செயல்படும்!

‘நெட்வொர்க் ஆப்ரேட்டிங் சென்டர்’ (Network Operating center) கொச்சினில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் வாயிலாக கேரளாவில் இணையம் எல்லா இடங்களுக்கும் சென்றடைகிறதா? என்பது கண்காணிக்கப்படும். மேலும் மின் கம்பங்கள் வாயிலாகவே இணைய கேபிள்கள் இணைக்கப்பட்டு வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. மின்சார வாரியம் , தொழில்துறை, பாரத் எலக்ட்ரானிக்ஸ் இணைந்து இதை செயல்படுத்துகிறது. இதைக் கண்காணிக்க ’375’ இடங்களில் பாயின்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ்(POP) அமைக்கப்படும். இவை வளைவு வடிவிலான இணைப்புகளால் (Ring Network Architecture) கட்டமைக்கப்படுகிறது. இதனால், மிகச் சரியாக அனைத்து இடங்களுக்கும் இந்த வசதி சென்றடையும்.

கேரளா – இணையம் சேவை

குறிப்பாக, வீட்டில் மோடம்(Modem) வழங்கப்பட்டு ‘வைஃபை’ வசதிக்கொண்டு இணையத்தைப் பயன்படுத்தலாம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு முதலிம் 1.5 ஜி.பி இண்டர்நெட் இலவசம், அதற்கு மேல் அதைப் பயன்படுத்த நினைப்பவர்கள் அரசிடம் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அதற்கும் பல திட்டங்களை(package) கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.

மின் வாரியம்

’இணையம்’ மக்கள் உரிமை!

இணையம் மக்கள் உரிமை (Right to Internet) என்னும் அடிப்படையில் இந்த இலவச சேவையைக் கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. மற்ற தனியார் துறைகளைவிட கேஃபோன் சேவைகள் ’குறைந்த கட்டணத்தில்’ மக்களைச் சென்றடையும். மேலும், நகரம், கிராமம், மலைகிராமம் என மாநிலத்தில் எந்த மூளையிலும் அதிவேகமான இணைய சேவையை அரசால் கொடுக்க முடியும்.

கேஃபோன் – இணைய சேவை

மாநிலத்துக்கு ’தனி’ இணைய வசதி சாத்தியமா?

தனியார் நிறுவனங்கள் இணைய சேவையைத் தொடங்க வேண்டுமென்றால், மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்திடம் இணைய சேவை நிறுவன (Internet Service Provider ) உரிமம் பெற வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதைப் பெறும்போது, மாநில அரசால் பெறமுடியாதா?. கேரளாவின் ’கேஃபோன்’ நிறுவனம் உரிய உரிமம் பெற்று இதனை தொடங்கியுள்ளது. அதுவும் ’எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் உயரிய நோகத்துடன் தொடங்கியிருப்பதாகக் கூறுகின்றனர் கேரள கம்யூனிஸ்டுகள்….

டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுக்கு எதிராக…

மாநிலத்தில், நகரத்தில் உள்ள மக்கள் அதிவேக இணைய வசதியைப் பெறுகின்றனர். ஆனால், கிராமங்களில் நத்தை வேகத்தில்தான் இந்த வசதி கிடைக்கிறது. காரணம், தனியார் நிறுவனங்கள் கிராமத்தில் இந்தச் சேவை வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு (Digital Divide) முற்றிலும் துடைத்தெறியும் நோக்கத்தில் இந்த சேவையை ஏழை மக்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு குறைந்து விலையில் வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

கேரளா ’கேஃபோன்’- இணையம் சேவை

இது குறித்து கேஃபோன் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் பாபுவிடம் கேட்டபோது, “கடந்த 2017-ம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2019-ம் ஆண்டு இதற்கான டெண்டர்கள் போடப்பட்டு பாதி பணிகள் முடிந்திருக்கின்றன. இதன் மொத்த மதிப்பீடு ரூ.1,612 கோடி. இதில் கேரள அரசு 20% பங்கையும், 80% பங்கு கேரள உள்கட்டமைப்பு முதலீடு நிதியமான கிஃப்பி வழங்குகிறது. இதன் ஆரம்ப கட்ட பணிகளுக்கு ரூ.1000 கோடியும், மீதம் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்துவோம். ’140’ சட்டசபை தொகுதிகளில், தொகுதிக்கு 100 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, மொத்தமாக 14,000 குடும்பங்களுக்கு இந்த சேவை தற்போது பரவலாக்கப்பட்டுள்ளது.

மேலும், 30,000 அரசு அலுவலகங்களுக்கு கொடுக்கும் இணைய சேவையிலிருந்து ஆண்டுக்கு ரூ.200 கோடி கிடைக்கும். மேலும், தனியார் நிறுவனங்களுக்கும் இணைய சேவையை வழங்கி வருவாய் அதிகரிக்கும் திட்டமும் இருக்கிறது. வரும் ஜூலையிலிருந்து அதற்கான பணிகளும் தொடங்கும். தனியார் நிறுவனத்துக்கு எந்தளவுக்கும் சளைத்ததாக கேரள ’கேஃபோன்’ இருக்காது. இந்த சேவை வாயிலாக ஆண்டுதோறும் நிறுவனத்துக்கு ரூ.350-500 கோடி வருவாய் கிடைக்கும். தமிழகத்திலும் ’டேன்ஃபினெட்’ தொடங்கப்பட்டது. ஆனால், அது மத்திய அரசு திட்டமாக செயல்படுத்தப்பட்டது. எந்த மாநிலத்திலும் இது போல திட்டங்களை தன்னிச்சையாக செயல்படுத்த முடியும். அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் கேஃபோன் நிறுவனம் இருக்கிறது ” என்றார்.

சந்தோஷ் பாபு

இது குறித்து சில தொழில்நுட்ப வல்லுநர்களிடம் கேட்டபோது, “ மாநிலத்தில் ’ஆப்டிக் கேபிள்’ மூலமாகத்தான் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான வசதிகளை உருவாக்கி தருவதே மாநிலங்கள்தான். அதன் வாயிலாக தான் தனியார் நிறுவனங்கள் இணைய சேவையை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு தனியார் இணைய சேவை நிறுவனமும் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்தக் கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுக்குதர வேண்டும். ஆனால், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் நகரத்தை மட்டுமே வணிகம் செய்யும் இடமாகக் கொள்வார்கள்.

ஆனால், கேரளா அரசு கிராம புறங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கிறது. அதிலும், குறிப்பாக லாபம் நோக்கம் என்பதைத் தாண்டி மக்களின் முன்னேற்றம் என்னும் நோக்கத்தில் மட்டுமே இதை முன்னெடுக்கின்றனர். தவிர, தனியார் நிறுவனத்துக்கும் தன் சேவையைக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது. அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து இலவச இணைய வசதியை மேம்படுத்துவது சாத்தியம் என அரசு நினைக்கிறது” என்கின்றனர்.

கேரளா ’கேஃபோன்’- இணையம் சேவை

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பத்ரி, “கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தோடு இணைந்து தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்ரேஷன் என்னும் பெயரில் கிராமங்களுக்கு இணைய சேவையைக் கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால், அது நடைமுறைப்படுத்தவில்லை. அது கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், அதைத் தமிழக அரசு மீண்டும் கையிலெடுத்துள்ளது. தமிழகத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தும் இந்த இணைய சேவை திட்டங்களுக்கு நிச்சயமாக தனியார் இணைய சேவை நிறுவனங்களைச் சார்ந்து மட்டுமே இருக்க முடியும்.

ஆனால், கேரளாவில் கொண்டுவந்திருக்கும் கேஃபோன் என்பது தனித்துவமானது. காரணம், மத்திய அரசிடமிருந்து இணைய சேவை நிறுவனம் (ISP) என்னும் உரிமம் பெற்று செயல்படுத்துகிறது. குறிப்பாக, ஏழைகளுக்கு இலவசம் என அறிவித்திருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இது போன்ற வசதிகளைத் தமிழகத்திலும் கொண்டுவர முடியும். அதற்கான அனைத்து கட்டமைப்புகள் வசதிகளும் தமிழகத்தில் இருக்கிறது” என்றார்.

பத்ரி

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், மத்திய அரசிடம் ஐ.எஸ்.பி பெற நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது. அதை விரைவில் நிறைவேற்ற வேண்டும். அதன் அடுத்தகட்ட பணிக்காகத்தான் கேரளாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் அமைச்சர் என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்!.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.